ஜிஎஸ்டி அமலாக்கம்: நாடாளுமன்றத்தில் நள்ளிரவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

வரலாற்றுச் சிறப்பு மிக்க சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாகப் போவதை வரவேற்கும் விதமாக வரும் 30-ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்ற மைய

வரலாற்றுச் சிறப்பு மிக்க சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாகப் போவதை வரவேற்கும் விதமாக வரும் 30-ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, அனைத்து மாநில முதல்வர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கும் இந்த சிறப்பு நிகழ்ச்சியானது, நள்ளிரவையும் கடந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவெகெளடா உள்பட பல தலைவர்களும் பங்கேற்றுப் பேசவுள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி சட்டத்தைக் கொண்டுவர மத்திய பாஜக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியில் அதுதொடர்பான மசோதாவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அனைத்து வகையான சரக்கு மற்றும் சேவைகளுக்கான வரிவிதிப்பு விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் அண்மையில் அறிவித்திருந்தது. அடுத்த மாதம் முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமலாக்குவதற்கான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துக்கான தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் இக்கோரிக்கையை எழுப்பியிருந்தனர்.
இந்தச் சூழலில், ஜிஎஸ்டி சட்டம் நடைமுறைக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாக மறுத்தார். ஏற்கெனவே அறிவித்தபடி ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com