தில்லி அமைச்சர் சத்யேந்தர் மனைவியிடம் சிபிஐ விசாரணை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரம்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரம்  தொடர்பாக தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மனைவி பூணம் ஜெயினிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை  நடத்தினர்.  

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரம்  தொடர்பாக தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மனைவி பூணம் ஜெயினிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை  நடத்தினர்.  
வழக்கு விவரம்: தில்லியில் 2015}16 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சியின்போது, பிராயஸ் இன்போ சொல்யூஷன்ஸ், அகின்சன்ஸ் டெவலபர்ஸ்,  மங்கள்யதன் புராஜெக்ட்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் மூலம் ரூ. 4.63 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாகக் கூறி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக சிபிஐயிடம் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில்  சிபிஐ ஆரம்பநிலை விசாரணைக்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  
 இந்த நிலையில்,  அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டுக்கு திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் குழு சென்றது. அங்கு அவரது மனைவி பூணம் ஜெயினிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இது குறித்து சிபிஐ உயரதிகாரி கூறுகையில், "சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக சத்யேந்தர் ஜெயினின் மனைவிடம் சில விளக்கங்களை அதிகாரிகள் கேட்டனர். மேற்கொண்டு எந்த விவரத்தையும் தெரிவிக்க இயலாது' என்றார்.
ஆம் ஆத்மி கட்சி கருத்து: இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை சிக்க வைக்க சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.  
தற்போதுள்ள வழக்கின் குற்றச்சாட்டுகளில் எவ்வித  உண்மையும் கிடையாது. சத்யேந்தர் ஜெயினிடம் பணிபுரிந்ததாகக் கூறப்படும் சஞ்சய், சுரேஷ் ஆகிய இருவரும் கொல்கத்தாவில் உள்ள நபர்கள் மூலம் ஹவாலா பணத்தை 2010}ஆம் ஆண்டு முதல் அனுப்பிய
தாக கூறப்படுவதிலும் உண்மையில்லை' என்றார் சௌரவ் பரத்வாஜ்.
இந்த நிகழ்வு குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறுகையில், " வியாபம் ஊழல், பனாமா பேப்பர் முறைகேடு, டிடிசிஏ முறைகேடு ஆகியவற்றை மூடிமறைக்கவும், திசைத்திருப்பவும் நாள்தோறும் ஒவ்வொரு ஆம் ஆத்மி தலைவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி மக்களின் கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது' என்றார்.
பாஜக வலியுறுத்தல்: இந்த விவகாரம் தொடர்பாக தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், "ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பதவி விலக வேண்டும்' என வலியுறுத்தினார்.  
தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், "தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், கேஜரிவால் அரசும் அரசியல் மாண்பை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com