எய்ம்ஸ் மருத்துவர்கள் ஹெல்மெட் அணிந்து பணியாற்றினர்: மகாராஷ்டிரா மருத்துவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளுறை (ரெசிடெண்ட்) மருத்துவர்கள்  நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தில்லி எய்ம்ஸ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளுறை (ரெசிடெண்ட்) மருத்துவர்கள்  நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தில்லி எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் புதன்கிழமை ஹெல்மெட் அணிந்து பணியாற்றினர்.
உள்ளுறை மருத்துவர்களுக்கு மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு அளிக்கக் கோரி மகாராஷ்டிரா மாநிலத்தில் 4000-க்கும் மேற்பட்ட உள்ளுறை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தில்லி எய்ம்ஸில் பணியாற்றும்  உள்ளுறை மருத்துவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் தலையில் ஹெல்மெட் அணிந்து பணியாற்றினர்.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின்  உள்ளுறை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் விஜய் குர்ஜார் கூறுகையில், "மருத்துவமனையில் பணியாற்றும் உள்ளுறை மருத்துவர்கள் தாக்கப்படுவது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. நாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசு முன்வராமல், எங்கள் சம்பளம் குறைக்கப்படும் என்றும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படுவீர் என்றும் மிரட்டி வருகிறது.
பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாநில அரசு இதுவரை எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. இது எங்கள் பணியை அவமதிக்கும் செயலாகும்.
எங்கள் பார்வை மற்றும் வாழ்க்கையைத் தொலைக்க விரும்பவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலும் மகாராஷ்டிரா மாநில உள்ளுறை மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் 1200 எய்ம்ஸ் உள்ளுறை மருத்துவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து அவசர சிகிச்சையில் பணியாற்றினர்கள்' என்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளுறை மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, பாதுகாப்பு கோரி அவர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  உள்ளுறை மருத்துவர்கள் புதன்கிழமை மாலைக்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால் அவர்களின் 6 மாத சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு எச்சரித்துள்ளது.
முன்னதாக, இதுதொடர்பான வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், "மருத்துவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் ராஜிநாமா செய்யுங்கள். மருத்துவர்கள் ஒன்றும் தொழிற்சாலை ஊழியர்கள் அல்ல போராட்டம் நடத்துவதற்கு. இதற்கு நீங்கள் வெக்கப்பட வேண்டும்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.


தில்லியிலும் இன்று 40 ஆயிரம் மருத்துவர்கள் விடுப்பு
மகாராஷ்டிரா மருத்துவர்களுக்கு ஆதரவாக தில்லியில் உள்ள 40 அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரம் உள்ளுறை மருத்துவர்கள் வியாழக்கிழமை முதல் விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதனால் தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமை மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளுறை மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பங்கஞ் சோலங்கி கூறுகையில், " உள்ளுறை மருத்துவர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாலும், மகாராஷ்டிரா மாநில உள்ளுறை மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவும் தில்லியில் உள்ள 40 அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் உள்ளுறை மருத்துவர்கள் வியாழக்கிழமை விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளனர். தில்லியில் மட்டும் சுமார் 40 ஆயிரம்  உள்ளுறை மருத்துவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். ஆனால் அவசர சிகிச்சையில் பணியாற்றும் உள்ளுறை மருத்துவர்கள் மட்டும் வியாழக்கிழமையும் ஹெல்மெட் அணிந்து பணிக்கு செல்வார்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com