நாடாளுமன்ற வளாகத்துக்குள் சுயபடம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை!

நாடாளுமன்ற வளாகத்துக்குள் "சுயபடம்' எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றப் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் "சுயபடம்' எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றப் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பார்வையிடவும் கூட்டத்தொடர் அல்லாத நாள்களில் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பார்க்கவும் பொதுமக்களுக்கும் எம்.பி.க்களின் விருந்தினர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். இதில், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரின் போது, பார்வையாளர்கள் உள்ளே வந்து அவையின் நிகழ்வுகளை மாடத்தில் இருந்து பார்வையிட வேண்டுமானால், அவர்களுக்கு மக்களவை அல்லது மாநிலங்களவை எம்.பி. பரிந்துரை செய்து  அதற்குரிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்கள், வெளிப்புற  வாசல், பிரதான வாயில், மாடத்துக்கு செல்லும் வழி, பார்வையாளர் மாடம் அமைந்துள்ள முதலாவது மாடி ஆகிய நான்கு இடங்களில் பாதுகாப்புக் கெடுபிடிகளை எதிர்கொள்ள வேண்டும். மாடத்துக்கு செல்லும் நபர்கள் தங்களின் அடையாள அட்டை நீங்கலாக பேனா, இரும்புப் பொருள்கள் உள்ளிட்ட எந்தவிதப் பொருள்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
எனினும் இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசுத் துறை உயரதிகாரிகள், மக்களவை, மாநிலங்களவைச் செயலக அதிகாரிகள், ஊழியர்கள், நாடாளுமன்றப் பத்திரிகை ஆலோசனைக் குழு மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிருபர்கள், ஒளிப்பதிவு, புகைப்படக் கலைஞர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற நிகழ்வுகளைப் பார்வையிட்ட பிறகு செல்லிடப்பேசி மூலம் படம் எடுக்கவும், நாடாளுமன்ற வளாகத்தில் சுயபடம் (செல்ஃபி) எடுக்கவும் விருந்தினர்களுக்கு சிலர் (செல்லிடப்பேசி வைத்துக் கொள்ள அனுமதி பெற்றவர்கள்) தங்களின் செல்லிடப்பேசியை கொடுத்து உதவுதாகத் தெரிகிறது.
அவ்வாறு எடுக்கப்படும் படங்களை முகநூல் (ஃபேஸ்புக்), சுட்டுரை, கட்செவி (வாட்ஸ்ஆப்) போன்ற சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் சிலர் பதிவேற்றம் செய்வதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக நாடாளுமன்றத்தின் பாதுகாப்புப் பணியை ஏற்றுள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் சிறப்புக் குழு (பிடிஜி) கருதுகிறது.  
ஏற்கெனவே நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு காட்சிகளை விடியோ படம் எடுத்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் எம்.பி. பகவந்த் மான் கடந்த ஆண்டு சிக்கினார். இதில் பகவந்த் மான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வரும் பார்வையாளர்கள் தரப்பில் இருந்தும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வருவதால், அனுமதியின்றி நாடாளுமன்ற வளாகத்தில் படங்களை எடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளது.
பார்வையாளருக்குப் பரிந்துரை செய்யும் எம்.பி.க்கு அவர் சம்பந்தப்பட்ட மாநிலங்களவை அல்லது மக்களவைத் தலைவர் மூலம் எச்சரிக்கை விடுப்பது, சுயபடத்தை சமூக  ஊடகங்களில் பதிவேற்றும் நபர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது, சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கடிதம் பெற்று அவர்கள் எடுத்துக் கொண்ட படங்களை அழித்து விடுவது போன்ற கெடுபிடியை விதிக்கப் பாதுகாப்புப் படைக் குழு திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com