புதிய பள்ளிக் கட்டடம் கட்ட எதிர்ப்பு: மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

திருத்தணி அருகே கெஜலட்சுமிபுரம் கிராமத்தில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமாபுரம், இருளர் காலனி கிராம மக்கள்

திருத்தணி அருகே கெஜலட்சுமிபுரம் கிராமத்தில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமாபுரம், இருளர் காலனி கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சிக்கு உள்பட்டது கெஜலட்சுமிபுரம் கிராமம். இங்கு கடந்த 50 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கெஜலட்சுமிபுரம், ராமாபுரம், இருளர் காலனி ஆகிய 3 கிராமங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கெஜலட்சுமிபுரம் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை திருத்தணி, திருவள்ளூர் ஆகிய நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர். இதனால் ஆண்டுக்காண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது ராமாபுரம், இருளர் காலனியைச் சேர்ந்த 28 மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
பழைய சீமை ஓடுகளால் ஆன பள்ளிக் கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், ஊராட்சி ஒன்றிய சிறப்பு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்க உள்ளது.
இந்நிலையில், மாணவர்களே இல்லாத கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம் கட்ட ராமாபுரம், இருளர் காலனி ஆகிய 2 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பள்ளிக் கட்டடம் கட்ட ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளதால், ராமாபுரம், இருளர் காலனி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ராமாபுரம் இருளர் காலனி கிராமத்தைச் சேர்ந்த மோகனலட்சுமி கூறியதாவது: எங்கள் குழந்தைகள் இரண்டு கி.மீ. தொலைவு நடந்து சென்று படிக்க வேண்டியுள்ளது.  கெஜலட்சுமிபுரம் கிராமத்துக்கு சரியான சாலை வசதிகூட இல்லாத நிலையில் குழந்தைகள், சிறுவர்களை தினமும் பள்ளிக்கு சிரமப்பட்டுதான் அனுப்பி வருகிறோம்.
மாணவர்களே இல்லாத கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவது எவ்வித பயனும் தராது. எனவே ராமாபுரம் கிராமத்திலேயே பள்ளிக் கட்டடம் கட்டினால்தான் எங்கள் குழந்தைகளைப் படிக்க அனுப்புவோம். இல்லையெனில் பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்றார். அதேசமயம் கெஜலட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இப்பள்ளியை மாற்றக் கூடாது, மாற்ற விடமாட்டோம் எனக்கூறி வருகின்றனர்.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுத்து உடனடித் தீர்வு காணவேண்டும் என மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com