மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு: அதிருப்தியில் ஆம் ஆத்மி, பாஜகவினர்

தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், அக்கட்சியின் தலைமை மீது ஒரு பிரிவு தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தில்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், அக்கட்சியின் தலைமை மீது ஒரு பிரிவு தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியிலோ, ஸ்வராஜ் இந்தியா கட்சியிலோ இணையக்கூடும் என்று கூறப்படுகிறது. இதேபோல், பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத கவுன்சிலர்களும் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்.
பிகாரின் மேற்குப் பகுதி, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய "பூர்வாஞ்சல்' பிராந்தியத்தைச் சேர்ந்த மக்கள், தில்லியில் கணிசமான அளவில் வசிக்கின்றனர். வடக்கு தில்லியில் புராரி, ஜஹாங்கீர்புரி, உத்தம் நகர் உள்ளிட்ட இடங்களிலும், தெற்கு தில்லியில் சங்கம் விஹார், ஓக்லா ஆகிய இடங்களிலும், கிழக்கு தில்லியின் பல பகுதிகளிலும் பூர்வாஞ்சல் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இதனால், தில்லி அரசியலில் பூர்வாஞ்சல் பிராந்தியத்தை பூர்வீகமாக கொண்டவர்களின் ஆதிக்கமும் அதிகம் உள்ளது. ஆம் ஆத்மி எம்எல்ஏக்களான ராஜேஷ் ரிஷி, பந்தனா குமாரி, கபில் மிஸ்ரா, சஞ்சீவ் ஜா, ரிதுராஜ், பிரகாஷ் ஜர்வால் ஆகியோர் பூர்வாஞ்சலை பூர்வீகமாக கொண்டவர்கள்.
இந்நிலையில், அந்த கட்சியில் உள்ள பூர்வாஞ்சல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள், தற்போது கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்வரும் தில்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதே அதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
தில்லியில் மொத்தமுள்ள 276 வார்டுகளில் 260 வார்டுகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதில், பூர்வாஞ்சல் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
இதனால், ஆம் ஆத்மியின் ஒரு பிரிவு தலைவர்கள், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. இதனை, ஐக்கிய ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
இதேபோல, ஆம் ஆத்மியில் அதிருப்தியில் இருக்கும் இன்னும் சிலர், யோகேந்திர யாதவின் ஸ்வராஜ் இந்தியா கட்சியில் சேரவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்தது. ஆனால், தற்போதைய மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக ஐக்கிய ஜனதா தளமும் களமிறங்கியுள்ளது.
இதேபோல் மூன்று மாநகராட்சிகளிலும் ஆட்சியில் உள்ள பாஜக, தங்களது கவுன்சிலர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதனால் கட்சித் தலைமை மீது பாஜக கவுன்சிலர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் சில மூத்த கவுன்சிலர்கள் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கட்சித் தலைமையின் இந்த முடிவை மாற்ற வலியுறுத்தி அவர்கள் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து முறையிட்டு வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான நிதின் கட்கரியை பாஜக கவுன்சிலர்கள் புதன்கிழமை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.


தில்லியில் ஏப்.9-இல் நிதீஷ் குமார் பிரசாரம்
எதிர்வரும் தில்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் அடுத்த மாதம் 9-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இதுதொடர்பாக, ஐக்கிய ஜனதா தள தேசிய பொதுச் செயலாளரும், தில்லி பிரிவு பொறுப்பாளருமான சஞ்சய் ஜா, தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளுமே தங்களை ஏமாற்றிவிட்டதாக தில்லியில் வாழும் பூர்வாஞ்சல் பிராந்திய மக்கள் கருதுகின்றனர். பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஊழலற்ற ஆட்சி, சிறப்பான நிர்வாகம் ஆகியவை காரணமாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீது தில்லி மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. தில்லியில் மொத்தமுள்ள 276 வார்டுகளில் 150 வார்டுகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக 12 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களை ஆதரித்து, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தில்லியில் வரும் 9-ஆம் தேதி இரு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். எந்தெந்த இடங்களில் அவரது பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வது என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்றார் சஞ்சய் ஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com