"ஆர்டிஐ' நிலுவை விண்ணப்பங்கள் மீது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தீர்வு: தலைமை தகவல் ஆணையர் உறுதி

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் கோரி நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தீர்வு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் கோரி நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தீர்வு காணப்படும் என்று மத்திய தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் உறுதியளித்தார்.
தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்ட அமலாக்கம் தொடர்பான கருத்தரங்கை தில்லி லோதி சாலையில் உள்ள ஸ்கோப் வளாகத்தில் தகவல் ஆணையம் வெள்ளிக்கிழமை நடத்தியது.
இக்கருத்தரங்கை தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர் தொடங்கி வைத்து  பேசுகையில், "ஆர்டிஐ நிலுவை விண்ணப்பங்களை விரைந்து விசாரித்து முடிக்க தகவல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் அடுத்து ஆண்டு மார்ச் இறுதிக்குள் முடிவெடுக்கப்படும்' என்றார்.   
இந்த கருத்தரங்கில் "அரசு அதிகாரியின் தனி உரிமை நோக்கம்' என்ற தலைப்பில் தகவல்  ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு பேசுகையில், "தகவலை அளிப்பதில் வெளிப்படைத்தன்மையை அரசுத் துறைகள் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு  தேவைப்படும் தகவலை தயக்கமின்றி அளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
இந்த கருத்தரங்கத்தில் சிஎச்ஆர்ஐ (COMMONWEALTH HUMAN RIGHTS INITIATIVE)  இயக்குநர் சஞ்சய்  ஹஜாரிகா "தொழில்சார்ந்த ஊடகவியலுக்கு தகவல் உரிமைச் சட்டம்' என்ற தலைப்பில்  பேசினார். அப்போது அவர், "தகவல் அறியும் உரிமை சட்டத்தை இன்னும் கூடுதலாக ஊடகவியலாளர்கள் பயன்படுத்தி தகவல்களைப் பெற வேண்டும். ஆர்டிஐ சட்டத்தின் மூலம் இன்னும் சிறப்பான செய்திகளை சமூகத்துக்கு நம்மால் அளிக்க முடியும். தகவல் உரிமை பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்கள் சரிவர வெளியிடப்படாவிட்டால், அது பற்றிய முழு விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தோண்டி, துருவி வெளியிட வேண்டும்' என்றார்.
சிஎச்ஆர்ஐ அமைப்பின் மற்றொரு செயல்பாட்டாளர் வெங்கடேஷ் நாயக் பேசுகையில், "தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக பல்வேறு வழக்குகளில் முரண்பட்ட தீர்ப்புகள் உயர் நீதிமன்றங்களில் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் தகவல் அறியும் உரிமை  சட்ட அமலாக்கத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என்றார்.
இந்த கருத்தரங்கத்தில்  கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், தொண்டு நிறுவனங்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எவ்வாறு அமல்படுத்த வேண்டும் என்பது குறித்த உரையை வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து மற்றொரு தகவல் ஆணையர் யஷோவர்தன் ஆசாத் நிறைவுரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com