கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் தில்லி அமைச்சர்களாக நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

தில்லி அமைச்சரவையில் கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கௌதம் ஆகிய இருவரையும் புதிய அமைச்சர்களாக நியமிக்க குடியரசு தலைவர்

தில்லி அமைச்சரவையில் கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கௌதம் ஆகிய இருவரையும் புதிய அமைச்சர்களாக நியமிக்க குடியரசு தலைவர் பிரணாப்  முகர்ஜி முறைப்படி ஒப்புதல் தெரிவித்தார். இதேபோல, தில்லி நீர்வளத் துறை அமைச்சர் பதவியில் இருந்து கபில் மிஸ்ரா நீக்கப்பட்ட நடவடிக்கைக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல்  அளித்தார்.
அமைச்சர்கள் நீக்கம்: தில்லி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப் குமார்.  கடந்த ஆண்டு ஒரு பெண்ணுடன் சந்தீப் குமார் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடங்கிய குறுந்தகடு வெளியானது. இதையடுத்து எழுந்த சர்ச்சையால் அமைச்சர் பதவியில் இருந்து சந்தீப் குமாரை நீக்கி தில்லி முதல்வர் கேஜரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து, அந்தப் பதவி நிரப்பப்படாமல் காலியாக இருந்து வந்தது.
இந்நிலையில், தில்லி நீர் வளம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா கடந்த 6-ஆம் தேதி அப்பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார்.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி எல்ஏக்கள் கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கௌதம் ஆகியோரை புதிய அமைச்சர்களாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனைப்படி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் நியமித்தார்.
மத்திய அரசு தாமதம்: சட்ட விதிகளின்படி யூனியன் பிரதேசம் மற்றும் தேசிய தலைநகர் அந்தஸ்து பெற்றுள்ள தில்லியின் மாநில அமைச்சர்கள் நியமனத்துக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் முறைப்படி பெறப்பட வேண்டும். இதன்படி, தில்லி அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கௌதம் ஆகியோரை நியமிக்கும் கோப்புகள் மத்திய உள்துறை  அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சகம் அந்த கோப்பை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதாக மத்திய அரசு மீது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் குற்றம்சாட்டினர்.
புதிய அமைச்சர்கள்: இந்நிலையில், இரு அமைச்சர்களின் நியமனங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் தெரிவித்தார். மேங்கு வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குடியரசு  தலைவர் பிரணாப் முகர்ஜி தமது பணிகளுக்கு இடையே இந்த கோப்பை பரிசீலித்து ஒப்புதல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த கோப்பு தில்லிக்கு வந்த சில நிமிடங்களில் நியமன அமைச்சர்களான கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் ஆகியோர் ராஜ் நிவாஸ் துணைநிலை ஆளுநர் இல்லத்துக்கு அழைக்கப்பட்டனர். அங்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட அமைச்சரவை சகாக்கள் முன்னிலையில் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com