பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு: தமிழக அரசியல் குறித்து விவாதித்ததாக தகவல்

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை சந்தித்தனர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக அவர்கள் பிரதமர் மோடியுடன் பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆலோசனை: தில்லிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலையில் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வந்தனர். தில்லி ஜன்பத்தில் உள்ள மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன் இல்லத்தில் அவர்கள் தங்கினர். இதைத்தொடர்ந்து தம்முடன் வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் மற்றும் தில்லியில் ஏற்கெனவே இருந்த தமது ஆதரவு மக்களவை உறுப்பினரான அசோக் குமார் ஆகியோருடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
 பின்னர் மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை லோக் கல்யாண் மார்கில் உள்ள அவரது இல்லத்தில் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் சந்தித்து மனு அளித்தனர். சுமார்  30 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் கூறியதாவது:
கோரிக்கை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்; வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும்; குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை வழங்க வேண்டும்; சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்பதைத் தடுக்க வேண்டும், தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை  அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்துள்ளோம் என்றார் பன்னீர்செல்வம்.
 இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் குறித்து பிரதமரிடம் பேசவில்லை என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். இருப்பினும், தமிழக அரசியல் நிலவரம், ஆளும் அதிமுகவில் உள்ள அமைச்சர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் பன்னீர்செல்வம் விளக்கியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தல் ஆணையத்தில் மனு: முன்னதாக இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் தலைமை தேர்தல் ஆணையத்திடம் 175 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் பன்னீர்செல்வம் தலைமையிலான அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
 இது குறித்து செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் கூறுகையில், "அதிமுக தலைமை குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்வரை வங்கி கணக்குகளை முடக்கி வைக்குமாறு "பொருளாளர்' என்ற முறையில் வங்கிக்கு எழுதிய கடிதம் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. விதிகளை மீறி கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கோடிக்கணக்கில் பணத்தை எடுக்க வங்கி நிர்வாகம் அனுமதிப்பதால் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையத்தை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளோம்.
 ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏற்கப்படுமா என்பதை தீர்மானிக்கக் கூடியவர்கள் மக்கள்தான் என்றார் பன்னீர்செல்வம்.
தம்பிதுரை சந்திப்பு: இதற்கிடையே, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் எழுதிய இரு புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, நிகழ்வின் முடிவில் சில நிமிடங்கள் பிரதமர் மோடியை தனியாக சந்தித்துப் பேசியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பிறகே பிரதமரை பன்னீர்செல்வம் குழுவினர் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com