மெட்ரோ கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: மாணவர், வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் மற்றும் வர்த்தக அமைப்பினர் தில்லி மெட்ரோ தலைமை அலுவலகத்தின் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் மற்றும் வர்த்தக அமைப்பினர் தில்லி மெட்ரோ தலைமை அலுவலகத்தின் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரகம்பா சாலையில் உள்ள மெட்ரோ பவன் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிபிஐ-எம்எல் (லிபரேஷன்), அதன் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய வர்த்தக சங்கங்களின் மத்திய கவுன்சில் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
ஆர்ப்பாட்டத்தின்போது, அகில இந்திய மாணவர் சங்கத்தின் தில்லி தலைவர் நீரஜ் குமார் கூறியதாவது:
தற்போது சுமார் 30 சதவீதம் வரையில் லாபம் சம்பாதிக்கும் தில்லி மெட்ரோ, அதை மேலும் அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது சாதாரண மக்கள் மீது சுமையை அதிகரிக்கிறது.
மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தில்லி போக்குவரத்து நிறுவனம் தடுமாறி வரும் நிலையில், மெட்ரோ ரயில் கட்டண உயர்வானது வரும் நாள்களில் மக்களுக்கு அதிக பிரச்னைகளை ஏற்படுத்தும்.
கட்டண உயர்வு காரணமாக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவதுடன், அவர்கள் சாலைப் போக்குவரத்தை பயன்படுத்தத் தொடங்குவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும் என்று நீரஜ் குமார் கூறினார்.
இதனிடையே, ஆர்ப்பாட்டக் குழுவினரின் பிரதிநிதிகளை சந்தித்த தில்லி மெட்ரோ அதிகாரிகள், கட்டண உயர்வை திரும்பப் பெறுவது தொடர்பாக அரசே முடிவு மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தனர்.
மெட்ரோ ரயில் கட்டண உயர்வு தொடர்பாக அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், இந்திய ஜனநாயக இளைஞர் சம்மேளனம், இந்திய மாணவர் சம்மேளனம், ஆகியவை ஏற்கெனவே ஜந்தர் மந்தரில் உள்ள மெட்ரோ ரயில் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்திய மாணவர் சம்மேளனத்தினர் வரும் 22-ஆம் தேதி பாரகம்பா சாலையில் உள்ள மெட்ரோ பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com