யமுனை சமவெளி: மலம் கழிக்க, குப்பை கொட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை: மீறுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

யமுனை நதி சமவெளியின் திறந்தவெளி பகுதியில் மலம் கழிக்கவும், குப்பைகள் கொட்டுவதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

யமுனை நதி சமவெளியின் திறந்தவெளி பகுதியில் மலம் கழிக்கவும், குப்பைகள் கொட்டுவதற்கும் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மீறும் நபர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
 "மைலி ஸே நிர்மல் யமுனா ரீவிட்டலிஷேஸன் திட்டம் 2017'-இன் அமலாக்கத்தை கண்காணிப்பது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பொது நல மனு  தாக்கல் செய்யப்பட்டது.
 தீர்ப்பாயத்தில் இந்த மனு மீது கடந்த மே 1-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஓக்லா, தில்லி கேட் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
 இந்நிலையில், நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முன் இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, யமுனையின் சமவெளிப் பகுதியின் திறந்தவெளியில் மலம் கழிக்கவும், குப்பைகள் கொட்டுவதற்கும் தடை விதித்த தீர்ப்பாயம், இந்த உத்தரவை மீறும் நபர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வசூலிக்குமாறு உத்தரவிட்டது.
 யமுனை நதி தூய்மைப்படுத்துவது தொடர்பான பணியை மேற்பார்வையிட தில்லி ஜல் போர்டு தலைமை செயல் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தும் உத்தரவிட்டது.
இக்குழு அதன் அறிக்கைகளை அவ்வப்போது தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், யமுனையின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ள குடியிருப்புப் பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை
எடுக்குமாறு தில்லி அரசுக்கும் தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
யமுனை நதியை அடையும் ஏறக்குறைய 67 சதவீதம் மாசுகள், "மைலி ஸே நிர்மல் யமுனா ரீவிட்டலிஷேஸன் புராஜக்ட் 2017' முதலாவது கட்ட திட்டத்தின் கீழ் நஜஃப்கர், தில்லி கேட் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படும் என தீர்ப்பாயம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com