ஜிஎஸ்டி-யில் சானிடரி நாப்கின்களுக்கு வரி விலக்கு: தில்லி மகளிர் ஆணையம் கோரிக்கை

சரக்கு மற்றும் சேவை வரி-யின் (ஜிஎஸ்டி) கீழ் சானிடரி நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிக்குமாறு தில்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யு) மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி-யின் (ஜிஎஸ்டி) கீழ் சானிடரி நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிக்குமாறு தில்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யு) மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
அனைத்துப் பெண்களுக்கு 10-12 வயது முதல் 45-50 வயது வரையில் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு என்றபோதிலும், அந்தச் சூழ்நிலையில் ஒரு பெண்ணுக்கு சுத்தமும், சுகாதாரமும் கிடைக்க வேண்டியது அடிப்படை உரிமையாகும்.
இந்நிலையில், அந்த காலகட்டத்தில் பெண்களால் பயன்படுத்தப்படும் சானிடரி நாப்கின்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரி விதிப்பின் காரணமாக விலை அதிகரிக்கும் சானிடரி நாப்கின்களை வாங்குவதற்கு ஏழைப் பெண்களால் இயலவில்லை.
இதனால் அவர்கள் நாப்கின்களுக்குப் பதிலாக சாதாரண துணிகளை பயன்படுத்த முனைகின்றனர். இது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
எனவே, சானிடரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி-யின் கீழ் வரிவிலக்கு அளிக்க வலியுறுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் ஒரு நல்ல முடிவானது, பல லட்சம் பெண்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய வழிவகுப்பதாக இருக்கும் என்று ஸ்வாதி மாலிவால் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, மக்களவை உறுப்பினர் சுஷ்மிதா தேவ் உள்ளிட்ட பல தலைவர்கள் சானிடரி நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com