கமாண்டோ படை வீரர்களுடன் "பிசிஆர்' வாகனங்கள்: காவல் துறை ஆணையர் பட்நாயக் தொடக்கி வைத்தார்

கமாண்டோ படை வீரர்களுடன் கூடிய போலீஸ் அவசர வாகனங்களை (பிசிஆர்) தில்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

கமாண்டோ படை வீரர்களுடன் கூடிய போலீஸ் அவசர வாகனங்களை (பிசிஆர்) தில்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
தில்லியில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், தில்லி போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
"பாரக்கரம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனங்களில் தேசிய பாதுகாப்பு படையின் பயிற்சி பெற்ற ஓட்டுநர், 3 கமாண்டோக்கள் இருப்பார்கள்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் விஜய் சௌக், பாலிகா பஜார், ஐ.பி. மார்க், சாகேத்தில் உள்ள செலக்கட் சிட்டி வாக் மால்,  வசந்த் குஞ்ச் மால், பசிபிக் மால், நேதாஜி சுபாஸ் பிளேஸ் மார்க்கெட், அக்ஷர் தாம் கோயில், லோடஸ் கோயில், ஜன்டேவாலான் ஆகிய இடங்களில் இந்த வாகனங்கள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி காவல் துறை சிறப்பு ஆணையர் தீபேந்தரா பதக் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், "உலகம் முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், தில்லியில் பயங்கரவாதத் தடுப்பு படையினரையும் பாதுகாப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோ படை வீரர்கள் கொண்ட போலீஸ் அவசர வாகனங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள், முக்கியமான நேரங்களில் மட்டும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். வழக்கமான பிசிஆர் வாகனங்களைப் போல் பயன்படுத்தப்படமாட்டாது.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையிலும், பொது மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையிலும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் தில்லி போலீஸின் பலமும் அதிகரிக்கும். இந்த "பாரக்கரம்' வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும்.  தேசிய பாதுகாப்புப் படையில் பயிற்சி பெற்ற ஓட்டுநர், பொறுப்பாளர் மற்றும் மூன்று கமாண்டோ வீரர்கள் வாகனத்தில் இருப்பார்கள்.
இந்த ஓட்டுநர்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களிடம் சிறிய வகை துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 9 பெண்கள் கமாண்டோக்கள் உள்ளனர். அனைத்து கமாண்டோக்களுக்கும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com