டீசல் என்ஜின்களின் புகை வெளியீட்டு தரங்களை 2 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டீசல் என்ஜின்களின் புகை வெளியீட்டுத் தரங்கள் தொடர்பான விதிகளை 2 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளத

டீசல் என்ஜின்களின் புகை வெளியீட்டுத் தரங்கள் தொடர்பான விதிகளை 2 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டீசல் என்ஜின்களில் இருந்து உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புகை வெளியேறுவதாக குற்றம்சாட்டி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் குஜராத் மாநிலம், துவாரகையைச் சேர்ந்த எஸ்.கே. கோயல் என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில் வழக்குரைஞர் ஆஜராகி வாதாடியதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் கடந்த 22-ஆம் தேதி நான் வைத்த அறிக்கை சரியானதல்ல; தீர்ப்பாயத்தின் கவனத்துக்கு உண்மைகள் தெரிவிக்கப்படவில்லை.
டீசல் என்ஜின்களின் வெளியீட்டு தரங்கள் தொடர்பான விதிகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இன்னும் 4 வாரங்களில், அது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழக்குரைஞர் தெரிவித்தார்.
இதைக் கேட்டுவிட்டு, தேசிய பசுமைத் தீர்ப்பாய அமர்வு கூறியதாவது:
டீசல் என்ஜின்களின் வெளியீட்டுத் தரங்கள் தொடர்பான விதிகள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுப்பி வைக்கப்பட்டதும், அதை 4 வாரத்துக்குள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் இறுதி செய்ய வேண்டும். இதில் தவறு எதுவும் நிகழும்பட்சத்தில், தவறு செய்யும் துறைகளுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாய அமர்வு தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 25-ஆம் தேதிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.
முன்னதாக, டீசல் என்ஜின்களில் இருந்து வெளியேறும் புகை தொடர்பான தரத்தை நிர்ணயிப்பது குறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ரயில்வே துறை ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, 6 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அப்போது, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், விதிகளை தயாரிக்க தங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. அதேநேரத்தில், ரயில்வே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சர்வதேச தரங்களைக் காட்டிலும் இந்தியாவில் டீசல் ரயில் என்ஜின்களில் இருந்து அதிக அளவுக்கு புகை வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com