பூரண மதுவிலக்கு கோரி தில்லியில் போராடி வரும் தமிழக இளைஞருக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆதரவு

பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 26 நாள்களாக  தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக இளைஞர் டேவிட் ராஜை தமிழ்

பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 26 நாள்களாக  தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக இளைஞர் டேவிட் ராஜை தமிழ்  மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவெட்டாறு அருகே ஆற்றூர் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ராஜ். இவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 26 நாள்களாக தில்லி ஜந்தர் மந்தரில் அறவழிப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். இவரை தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
 மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி இளைஞர் டேவிட் ராஜ் மனஉறுதியோடு 26 நாள்களாக தில்லி ஜந்தர் மந்தரில் ஐந்து பேருடன் அமர்ந்து அறவழியில் தர்னாவில் ஈடுபட்டு வரும் முயற்சி பாராட்டுக்குரியது. தமிழகத்தில் மதுவின் கொடுமையால் சாலை விபத்து, வன்கொடுமை, பாலியல் பலாத்காரங்கள், முன்விரோதங்கள், கொலை, கொள்ளை என பல சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க மதுக் கடைகளுக்கு மூடு விழா நடத்தப்பட வேண்டும். இதை மனதில் கொண்டுதான் தமாகா சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெற்று அன்றைய தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவிடம் அளிக்கப்பட்டது.
 தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் வீதியில் இறங்கிப் போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடித்தளமாக டேவிட் ராஜ் போன்ற இளைஞர்களின் விழிப்புணர்வு பணி அமைந்துள்ளது. தமிழகத்தில் 100 சதவீதம் மதுக்கடைகளை மூடுவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தமாகாவின் நிலைப்பாடு ஆகும்.
இந்த விஷயத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள டேவிட் ராஜ், தனது உடலை வறுத்திக் கொள்ளும் இப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகம் திரும்ப வேண்டும். அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் கலந்து பேசி அவரது பகுதியில் இருந்து இந்தப் போராட்டத்தை மீண்டும் தொடங்கலாம். இதற்கு தமாகா துணை நிற்கும். மற்ற கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருக்கு துணை நிற்கும் என நம்புகிறேன்  என்றார் ஜி.கே. வாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com