பேச்சுவார்த்தைக்கு தயார்; வாக்குவாதத்துக்கு அல்ல: ஜேஎன்யு போராட்டங்கள் குறித்து துணைவேந்தர் பேட்டி

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு தீர்வு காண மாணவர் சங்க பிரதிநிதிகளுடன்

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களுக்கு தீர்வு காண மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாது என்று அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம். ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.
ஜேஎன்யு மாணவர் நஜீப் அகமது காணாமல்போன விவகாரம், ஆய்வு மேற்படிப்புபிற்கான இடங்கள் குறைக்கப்பட்ட விவகாரம், அண்மையில் நடைபெற்ற 142வது கல்வி கவுன்சில் கூட்டத்தின் விவர பதிவுகள் மாற்றப்பட்ட விவகாரம், பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் மாநில மாணவர் ஒருவர் தயாரித்த விடியோ இணையதளங்களில் பரவிய விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், மாணவர்களுக்கும் இடையே பிரச்னைகள் நீடித்து வருகிறது. மாணவர்களுக்கு எதிரான கொள்கைகளையே பல்கலைக்கழக நிர்வாகம் வகுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்னைகள் குறித்து ஜேஎன்யு துணைவேந்தர் எம். ஜகதீஷ், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அளித்துள்ள பேட்டியின் விவரம்:
ஜேஎன்யு கல்வி கவுன்சில் கூட்டத்தில் விதிமுறைகளுக்கு உள்பட்டு அனைத்து உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்படும். அந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு கூட்டத்தின் குறிப்புகள் வெளியிடப்படும். ஆனால் கூட்டத்தின் பதிவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறுவது தவறு.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது ஜேஎன்யு போன்ற கல்வி நிறுவனங்களில் வழக்கமானதுதான். ஆனால் பல்கலைக்கழகத்தின் நன்மையை கருதியே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
எம்.பில்., பி.எச்.டி. போன்ற மேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு, ஆய்வு படிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முடிவாகும்.
இதில் பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகளை ஜேஎன்யு பல்கலைக்கழகம் பின்பற்றி வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழ்கல்வி ஆண்டில் மேற்படிப்புகளுக்கான இடங்கள் பெரிய அளவில் குறைக்கப்படவில்லை.
ஒரு பேராசிரியரின் கீழ் 60 மாணவர்கள் ஆய்வு படிப்புகளை மேற்கொள்வது என்பது வகுப்பறைப்போல் இருக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
என்னை சந்திக்க முடியவில்லை என்று மாணவர்கள் கூறுவது தவறு. மாதத்தின் முதல் திங்கள்கிழமைகளில் மாணவர்கள், முன் அனுமதியின்று என்னை சந்திக்கலாம். ஆசிரியர்கள் மாதத்தின் முதல் விழாயன்யன்று என்னை சந்திக்கலாம்.
இந்தக் காலக்கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் என்னை சந்தித்து உள்ளனர். மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் பிரச்னைகள் குறித்து திறந்த மனுதுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக உள்ளேன். ஆனால் அந்த பேச்சுவார்த்தை எது சரியானது என்பது குறித்து இருக்க வேண்டும். ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க முடியாது. வாக்குவாதத்தில் யார் தவறு செய்தது என்பது குறித்து முன்வைத்து பேசுவார்கள் என்று ஜகதீஷ் குமார் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com