மாணவியர் விடுதிக் கட்டணத்தை குறையுங்கள்! ஹிந்து கல்லூரிக்கு டிசிடபிள்யூ பரிந்துரை

மாணவியர் விடுதிக் கட்டணம் விவகாரம் தொடர்பாக ஹிந்து கல்லூரி முதல்வருக்கு தில்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) பரிந்துரை அளித்துள்ளது.

மாணவியர் விடுதிக் கட்டணம் விவகாரம் தொடர்பாக ஹிந்து கல்லூரி முதல்வருக்கு தில்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) பரிந்துரை அளித்துள்ளது.
தில்லியில் உள்ள ஹிந்து கல்லூரியில் புதிதாக 200 அறைகள் கொண்ட மாணவியருக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும், அதேவேளை மாணவர்களுக்கான விடுதிக் கட்டணம் குறைவாக இருப்பதாகவும், விதிகளிலும் முரண்பாடுகள் இருப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் இருந்து தில்லி மகளிர் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஹிந்து கல்லூரி முதல்வருக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு கல்லூரி நிர்வாகம் மூலம் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், "மாணவியரின் விடுதியானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) நிதியுதவி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. அதேவேளையில், மாணவர்கள் விடுதி யுஜிசியின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்புக்காக ஆண்டுதோறும் ரூ.60 லட்சம் நிதியும் பெறப்படுகிறது. இதன் காரணமாகவே, மாணவியர் விடுதிக்கான கட்டணம் அதிகமாக உள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஹிந்து கல்லூரி முதல்வருக்கு தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் பரிந்துரை செய்து எழுதியுள்ள கடிதத்தில், "மாணவியருக்கான விடுதிக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளார்.
 மேலும், அவர் யுஜிசிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மாணவியர் விடுதிக்கான நிதி அனுமதி தொடர்பான ஹிந்து கல்லூரியின் கோரிக்கையை யுஜிசி பரிசீலிக்க வேண்டும். மாணவர்கள், மாணவியர் ஆகிய இரு பாலருக்குமான சம வாய்ப்புகளை அளிக்க அனைத்து துறையினரும்  முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று யுஜிசி பாராட்டலாம். அதுமட்டுமின்றி, மகளிருக்கான உயர் கல்வி பெரிய அளவில் சென்றடைவதை ஊக்குவிக்கவும் வேண்டும்' என அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com