பெட்ரோல் விற்பனை நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளை
By DIN | Published on : 15th November 2017 12:33 AM | அ+அ அ- |
தெற்கு தில்லி, மாளவியா நகர் காவல் நிலையம் அருகே பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மாளவியா நகரில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் கமல்ஜீத் சேத்தி. இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக திங்கள்கிழமை சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டுக் காயமடைந்த அவரிடமிருந்து பணத்தை அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். இதில் காயமடைந்த கமல்ஜீத் சேத்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் இன்னும் தெரியவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மாளவியா நகர் காவல் நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்தத் துணிகரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.