அரை மாரத்தான் போட்டியை ஒத்திவைக்கக் கோரும் மனு: தில்லி அரசு, காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

"தில்லி அரை மாரத்தான்' போட்டியை ஒத்திவைக்க கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு தில்லி அரசு, காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

"தில்லி அரை மாரத்தான்' போட்டியை ஒத்திவைக்க கோரும் மனு மீது பதில் அளிக்குமாறு தில்லி அரசு, காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கு விவரம் வருமாறு: தில்லியில் காற்றின் தரம் மோசமாகவும்,  பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், தில்லியில் நவம்பர் 19-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள தில்லி அரை மாரத்தான் போட்டியை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்று  இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தலுக்கும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
தில்லியில் நிலவிவரும் காற்று மாசுவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரதான பொது நல மனுவுடன் இந்தக் கடிதத்தையும் மனுவாக சேர்த்து தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது.
 இம்மனுவை விசாரித்த  தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். ரவீந்திரா பட்,  சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வு,  இந்த விவகாரத்தில் வரும் நவம்பர் 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தில்லி அரசு, காவல் துறை,  தில்லி மாசுக் கட்டுப்பாடு குழு (டிபிசிசி) ஆகியவைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
 தில்லியில் நீடித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கவும், காற்றின் தரத்தை அதிகரிக்கவும் தில்லி அரசுக்கு கடந்த நவம்பர் 9-ம் தேதி தில்லி உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.  அப்போது, தில்லியில் காற்று மாசு மோசமாக உள்ளது. தலைநகர் அபாயகரமான சூழலில் உள்ளது.
இத்தகைய காற்று மாசுவைத் தடுக்க செயற்கை மழையைப் பொழிய வைப்பது, குறுகிய காலத்திற்கு வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தில்லி அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும்,  மெட்ரோ ரயில் சேவையையும், தில்லி அரசுப் போக்குவரத்து நிறுவனத்தின் பேருந்து சேவையையும் அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதவிர கட்டுமான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப் பரிசீலிக்குமாறு தில்லி அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.  
சாலைகளில் வாகன நெரிசல் இல்லாமல் இருப்பதை தில்லி காவல் துறையின் போக்குவரத்துக் காவல் பிரிவு உறுதிப்படுத்தவும்,  சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு முககவசம் அளிக்கவும் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க  ஹரியாணா, பஞ்சாப், தில்லி, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் கூட்டம் நடத்தவும் மத்திய சுற்றுச்சூழல் துறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com