பேருந்துகள் கொள்முதலில் போர்க்கால நடவடிக்கை! தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

"பேருந்துகள் கொள்முதலில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

"பேருந்துகள் கொள்முதலில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.
தில்லியில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் வகையில், ரூ.300 கோடி செலவில் தில்லி போக்குவரத்து நிறுவனத்துக்கு (டிடிசி) கூடுதலாக 2,000 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், "மாற்றுத் திறனாளிகள் ஏறுவதற்கு சிரமமான படிகள் கொண்ட பேருந்துகளை வாங்குவதற்கு தில்லி அரசு முடிவு செய்துள்ளது; எனவே, பேருந்து கொள்முதல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாற்றுத் திறனாளியான நிபுன் மல்ஹோத்ரா என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், "தில்லி அரசு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் ஏறுவதற்கான வசதிகள் கிடையாது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் குறித்து அரசுக்கு எந்த கவலையும் இல்லை என்பது தெரிகிறது. அரசின் இந்த நடவடிக்கை, தலைநகரிலுள்ள 2.34 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்கு எதிரானது. எனவே, பேருந்து கொள்முதல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீது தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, பேருந்துகள் கொள்முதல் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், நகரில் கூடுதல் பேருந்துகளுக்கான தேவை மிக மிக அவசியமாக உள்ளதாக கூறினர்.
இதுதொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறியதாவது: தில்லியில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை, 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 1998-ஆம் ஆண்டிலேயே உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை அந்த இலக்கு எட்டப்படவில்லை.
தனியார் வாகனங்களின் பெருக்கம், தலைநகரில் காற்று மாசுக்கு முக்கிய காரணம் என்று அனைத்து அரசு அமைப்புகளும் கூறுகின்றன. எனவே, பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை, தில்லி அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
நகரில் தற்போது நிலவி வரும் கடுமையான காற்று மாசு காரணமாக, பொதுமக்கள் சுவாசிப்பதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். ஒட்டுமொத்த தில்லி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை.
பஞ்சாப், ஹரியாணாவில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை மட்டுமே குறைகூறுவதை விடுத்து, தில்லியில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொள்ள வேண்டும். கூடுதல் பேருந்துகள் கொள்முதல் நடவடிக்கை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனிதா நரேனை நீதிபதிகள் நியமித்தனர்.
மேலும், பொதுப் போக்குவரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மேற்கண்ட மனுவில் எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைக்கு பதிலளிக்கும்படி தில்லி அரசு, தில்லி மெட்ரோ, வடக்கு ரயில்வே ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com