சொத்துப் பிரச்னையில் பாஜக தொண்டர் சுட்டுக்கொலை

தேசியத் தலைநகர் வலயம்,  கௌதம் புத் நகர் மாவட்டத்தில் சொத்துப் பிரச்னையில் பாஜக தொண்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தேசியத் தலைநகர் வலயம்,  கௌதம் புத் நகர் மாவட்டத்தில் சொத்துப் பிரச்னையில் பாஜக தொண்டர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  இச்சம்பவம் தொடர்பாக கடைமையைச் செய்யத் தவறியதாக காவல் துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தன்கௌர் காவல் நிலையப் பொறுப்பாளர் ஃபர்மூத் அலி கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம், கௌதம் புத் நகர் மாவட்டம், தன்கௌர் பகுதியைச் சேர்ந்தவர் சாகர் சர்மா (28). பாஜக தொண்டரான இவர், திங்கள்கிழமை இரவு தனது வீட்டுக்கு  சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த சர்மா,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக சாகர் சர்மாவின் சகோதரர் அபிமன்யு அளித்த புகாரின் பேரில் மனோஜ் (எ) தித்து, தீபக் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மனோஜ் கைது செய்யப்பட்டார். சாகர் சர்மாவை கொலை செய்ய தீபக் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் ஃபர்மூத் அலி.
 மேலும்,  சாகர் சர்மா சொத்துப் பிரச்னையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இக்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து,  கடைமையைச் செய்யத் தவறியதாக  தன்கௌர் காவல் நிலை உதவி ஆய்வாளர் பிரிதம் சிங்கை பணியிடை நீக்கம் செய்து கௌதம் புத் நகர் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் லவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், தீபக் தனது உரிமத் துப்பாக்கியை அதிகாரிகளிடம் ஏன் ஒப்படைக்கவில்லை என்று விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கௌதம் புத் நகர் மாவட்ட ஆட்சியர் பி.என். சிங்,  மூத்த காவல் துறைக் கண்காணிப்பாளர் லவ் குமார் ஆகியோர் தாத்ரியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான உத்தரவுகளையும் பிறப்பித்தனர்.
தேர்தலின் போது சட்டம், ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்த முயற்சி செய்வோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலைய ஆய்வாளர்கள்,   உதவி ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.  அதேபோன்று, உரிமங்களுடன் துப்பாக்கியை வைத்திருப்போர் அவற்றை  காவல் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து உயர் அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  உத்தர பிரதேசத்தில் நவம்பர் 22, , 26,  29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com