தில்லி அரசு அனைவருக்கும் சொந்தமானது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

"தில்லி தேசிய தலைநகர் என்பதால், அது நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது; தில்லியில் வசிப்பவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல'  என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.

"தில்லி தேசிய தலைநகர் என்பதால், அது நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது; தில்லியில் வசிப்பவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல'  என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
தில்லியில் வாழும் மக்களுக்கானஅரசு தில்லி அரசு என ஆம் ஆத்மி அரசு கூறி வரும் நிலையில், மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
"தில்லியின் நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது' என்று தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தில்லி அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண் 
ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனிந்தர் சிங் புதன்கிழமை ஆஜராகி முன்வைத்த வாதம்:
தேசிய தலைநகரான தில்லி இந்திய மக்களுக்கு சொந்தமானது. ஆனால், தில்லி மக்களுக்கு மட்டும் தில்லி சொந்தமானது என்று எப்படி கூற முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று தில்லி அரசு கூறி வருகிறது. அப்படியென்றால், மத்திய அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான். தில்லி சட்டப்பேரவைவிட மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது.
யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் உள்ள தில்லிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 
மாநில பட்டியலில் தில்லி இடம்பெறவில்லை. யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை இருந்தாலும் அது மாநில பட்டியலில் வராது. தில்லி ஒரு யூனியன் பிரதேசம்தான் என்பதை நாடாளுமன்றமும் உறுதி செய்துள்ளது. 
ஜனவரி 26-ம் தேதி தில்லியில் அணிவகுப்பு நடைபெறுமா; இல்லையா என்பது குறித்து தாங்கள் தான் முடிவு செய்வோம் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.
தில்லியின் நிர்வாக அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 239ஏஏ பிரிவில் முழுமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசுக்கு உள்ளதைப்போலவே தில்லி அரசுக்கும் சமமான அதிகாரம் உள்ளது என்று கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றார் அவர்.
முன்னதாக இந்த வாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "தில்லி அரசு சார்பில் ஆஜராகிய மூத்த வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களில் சில முரண்பாடுகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்ட விவகாரத்தில் சலுகைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கருத்து தெரிவித்தனர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில், "யூனியன் பிரதேசங்களில் தில்லிக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து இருந்தாலும், அதை வைத்துக் கொண்டு தில்லியை மாநிலமாக கருத முடியாது என்றும் தில்லியின் நாள்தோற நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்ள மட்டுமே தில்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் உண்மையான நிர்வாக அதிகாரம் மத்திய அரசிடமும், குடியரசுத் தலைவரிடமும்தான் உள்ளது என்றும்  மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் தில்லி அரசின் சார்பில் முன்பு ஆஜரான மூத்த வழக்குரைஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், "தில்லி அரசின் முடிவுகளை துணைநிலை ஆளுநர் ரத்து செய்கிறார் அல்லது போட்டி முடிவுகளை எடுக்கிறார். 
இதன் மூலம் ஜனநாயகத்தை துணைநிலை ஆளுநர் கேலிக்கூத்தாக்கி வருகிறார்' என்று வாதிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com