ஜிஎஸ்டி:  தொழில்நுட்ப பிரச்னைகளை 3 மாதங்களில் களைய பரிந்துரை

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வரி விதிப்பில் நிலவி வரும் தொழில்நுட்பப் பிரச்னையை மூன்று மாதங்களில் களைய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வரி விதிப்பில் நிலவி வரும் தொழில்நுட்பப் பிரச்னையை மூன்று மாதங்களில் களைய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 22-வது சரக்கு மற்றும் சேவை வரி  (ஜிஎஸ்டி)  கவுன்சில் கூட்டத்தில்  தமிழக மீன்வளம், பணியாளர், நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டார்.  
இது குறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  
வணிகப் பிரதிநிதிகள், வணிகக் கூட்டமைப்புகள் மற்றும் வணிகர்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கைகளை ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரிக் குறைப்பு மற்றும் விலக்களிப்பு செய்வது தொடர்பாக  கவுன்சில் கூட்டங்களில் தமிழகம் சார்பில் அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 22-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய நேர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.  சரக்குகள் மற்றும் சேவைகள் வரி  தொடர்பான தகவல் தொழில்நுட்ப ரீதியாக  ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட அமைச்சர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  இக்குழு தனது அறிக்கையில் தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்னைகளை கோடிட்டு காண்பித்து அதை மூன்று மாத காலத்திற்குள் களைவதற்கு வலியுறுத்தியுள்ளது. ஏற்றுமதியில் ஏற்படக்கூடிய பிரச்னைகளை கண்டறிந்து களைவதற்கு அமைக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அலுவலர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையின் கீழ் சிறு வரி செலுத்துவோருக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சில குறிப்பிட்ட சலுகைகள் வழங்குவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டது.  அதடிப்படையில், இணக்க முறையில் வரி செலுத்தும் சிறு வணிகர்களுக்கான உச்சவரம்பை ரூ.75 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்துவது; ரூ.20 லட்சத்திற்கு கீழ் விற்பனை அளவு கொண்டுள்ள வணிகர்கள் மாநிலங்களுக்கிடையே சேவைகளை மேற்கொள்ளும் போது  கட்டாயமாகப் பதிவு பெற வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து  விலக்களிப்பது,  ரூ.1.5 கோடிக்கு கீழ் வருடாந்திர விற்பனை அளவு கொண்டுள்ள வரி செலுத்துவோருக்கு மாதந்தோறும் நமூனா தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தாக்கல் செய்வது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 அரசு ஒப்பந்தப் பணிகளில்  25 சதவீதத்துக்கும் குறைவாக பொருள்கள் உபயோகிக்கும் பட்சத்தில், அதன் மீதான வரியைக் குறைப்பது; அச்சுத் தொழில், கவரிங் நகைகள், அப்பளம், பப்படம் போன்ற உணவுப் பொருள்கள் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான வரியைக் குறைப்பது குறித்தும்  விவாதிக்கப்பட்டன.
மேலும், அரசுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் சத்து மாவு மீதான வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாககக் குறைப்பது; ஸ்டாப்லர் பின் மீதான வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பது;  செயற்கை நூலிழை, நூற்கப்பட்ட நூலிழை மற்றும் தையல் வேலைக்கு பயன்படுத்தப்படும் நூல்கள் மீதான வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைப்பது;  பதிவு சின்னம் இடப்படாத ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மருந்துகள் மீதான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைப்பது; பதிவுச் சின்னம்  இடப்படாத இடப்படாத கார வகைகள் மீதான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்தல்; தண்ணீர் பம்ப்களின் உதிரி பாகங்கள் மீதான வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக்  குறைப்பது உள்ளிட்டவை குறித்து  கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இத்துடன்,   தமிழ்நாடு முன்வைத்த 52 பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரியைக் குறைப்பது, விலக்களிப்பது குறித்தும்  கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com