அரசு மருத்துவமனையில் அமைச்சர் சத்யேந்தர் திடீர் ஆய்வு: முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர் பணியிடை நீக்கம்

தில்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள அரசு மருந்தகம், மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  

தில்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள அரசு மருந்தகம், மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  
முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும்,  சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் அவ்வப்போது தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆய்வு  நடத்தி வருகின்றனர்.
அக்டோபர் 8-ஆம் தேதி வடகிழக்கு தில்லி, சீலாம்பூரில் ஜக்பிரவேஷ்  சந்திரா மருத்துவமனையிலும்,  அக்டோபர் 10-ஆம் தேதி தெற்கு தில்லியில் மதன் மோகன் மாளவியா மருத்துவமனையிலும்  அமைச்சர் ஜெயின் ஆய்வு செய்தார்.
இந்நிலையில்,   மயூர்விஹார் ஃபேஸ் 3-இல் தில்லி அரசு மூலம் நடத்தப்படும் மருந்தகத்தில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.  அவருடன்,  சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநர் உடனிருந்தார்.
நோயாளிகள் பதிவு கவுன்ட்டரில் வரிசையில் காத்திருந்த நோயாளிகள் சிலரிடம் அமைச்சர் ஜெயின் பேசினார். அப்போது,  பதிவுச் சீட்டுக்கு ரூ.5 வசூலிப்பதாக நோயாளிகள் புகார் அளித்தனர். இதையடுத்து,  அதுபோன்று கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதா என சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரிடம் அமைச்சர் வினவினார்.
அதற்கு அவர் அதுபோன்று விதிகள் ஏதும் இல்லை என்றார். இதையடுத்து,  கவுன்ட்டரில் பணியில் இருந்த ஊழியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது,  பதிவுச் சீட்டு வழங்குவதில் முறைகேடு இருப்பதாக தெரியவரவே பணியாளரை பணியிடை  நீக்கம் செய்ய அமைச்சர் ஜெயின் உத்தரவிட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 மேலும்,  மயூர்விஹார் ஃபேஸ் 2-இல் அமைந்துள்ள தில்லி அரசின் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் அமைச்சர் ஜெயின் ஆய்வு செய்தார். காலையில் மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் ஜெயின், வார்டில் இருந்த நோயாளிகளிடம் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அண்மையில் புறநோயாளிகள் பிரிவு ஆலோசனை நேரத்தை இரண்டு மணி நேரம் நீட்டித்தது குறித்து கேட்டறிந்தார்.  காலை 9 மணி முதல் 1 மணி வரையிலான புறநோயாளிகள் மருத்துவ ஆலோசனை நேரத்தை காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை நீட்டித்து அண்மையில் தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து,  இந்த வசதி குறித்து நோயாளிகளின் கருத்துகளை அமைச்சர் கேட்டறிந்ததாக மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com