தீபாவளி பண்டிகை: தலைநகரில் காற்றின் தரத்தை அமைச்சர் இம்ரான் ஹுசேன் ஆய்வு

வரவுள்ள தீபாவளி பண்டிகை,  குளிர்காலத்தை ஒட்டி தலைநகரில் சுற்றுப்புற காற்றின் தரத்தின் நிலவரம்  குறித்து தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசேன் வியாழக்கிழமை மறு ஆய்வு செய்தார்.

வரவுள்ள தீபாவளி பண்டிகை,  குளிர்காலத்தை ஒட்டி தலைநகரில் சுற்றுப்புற காற்றின் தரத்தின் நிலவரம்  குறித்து தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசேன் வியாழக்கிழமை மறு ஆய்வு செய்தார்.
தில்லியில் சுற்றுச்சூழல் அமைச்சர் இம்ரான் ஹுசேன் தலைமையில் அத்துறையின் உயர் அதிகாரிகளும், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு அதிகாரிகளும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.  
இக்கூட்டத்தின்போது சில தினங்களாக தில்லியில் சுற்றுப்புற காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.  
தில்லியின் அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது தொடர்வது, அதனால் தில்லியில் சுற்றுப்புற காற்றில் ஏற்படுத்தும் பாதிப்பு,  பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை  குறித்துப் பேசப்பட்டது.
அப்போது,  அமைச்சர் இம்ரான் ஹுசேன்,  "சுற்றுப்புற காற்றின் தரத்தை பேணும் வகையில் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும்.  
திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் எரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.  கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் தூசி உருவாகாமல் இருக்கவும்,  விதிகளை மீறிச்  செயல்படும் கட்டுமானதாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.  பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை முறையாக பின்பற்றவும், அதுதொடர்புடைய துறைகளுக்கு அனுப்பவும் வேண்டும்.
 தில்லியின் பல்வேறு சந்தைகளில் விதி மீறி பட்டாசு விற்போர் குறித்து கண்டறிய தனிக் குழுக்கள்அமைக்கப்படவேண்டும்.  
விதிமீறுவோர் குறித்த தகவல்களை போலீஸாருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது,  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல்கள் தில்லி காவல் துறை,  கோட்ட ஆணையர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்,  பட்டாசு பயன்படுத்துவதற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரங்களும் சுற்றுச்சூழல் துறை மூலம் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தெரு நாடகம், பாதயாத்திரை,  சொற்பொழிவு ,  பயிலரங்குகள் மூலம் சுற்றுச்சூழல் மன்றங்கள் வாயிலாக பட்டாசு தவிர்ப்பு பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு கல்லூரி, பள்ளி முதல்வர்களுக்கு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com