பயிர்க் கழிவுகளை எரிக்கும் விவகாரம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க பஞ்சாப் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பஞ்சாப் மாநிலத்தில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம்

பஞ்சாப் மாநிலத்தில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களது பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பயிர் கழிவுகளை எரிக்க உள்ளதாக பஞ்சாப் மாநில விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுவதை அடுத்து உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ரவீந்திர பாட் மற்றும் சுனில் கெளர் ஆகியோர் அடங்கிய அமர்வு, பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பஞ்சாப் அரசு வரும் 16-ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
முன்னதாக, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் செப்டம்பர் 22-ஆம் தேதி அறிவுறுத்தியிருந்தது. தில்லியின் காற்றுத் தரம் மோசமான நிலையை எட்டியது தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதுதொடர்பான விசாரணையின்போது அந்த அறிவுறுத்தலை நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதனிடையே, தில்லியில் குளிர் காலங்களில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டுவதற்கு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவது மட்டுமே காரணம் அல்ல என்று கூறி வழக்குரைஞர் ஹர்கியான் சிங் கெலாட் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.
மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் ஒட்டுமொத்த வாகனங்களின் எண்ணிக்கையை காட்டிலும் தில்லியில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகவும், அவற்றில் இருந்து வெளியாகும் புகை, பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை விட மோசமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
குறைந்த அளவிலான காற்று மற்றும் வெப்பநிலை மாற்றம் போன்றவையும் காற்று மாசு அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அவர் அதில் அவர் கூறியிருந்தார்.
மத்திய அரசு, பஞ்சாப், ஹரியாணா அரசுகள் பதிலளிக்க என்ஜிடி உத்தரவு
பயிர் கழிவுகள் எரிக்கப்படும் நிலை இன்னும் தொடர்வதாக வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி), அவற்றைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசு, பஞ்சாப், ஹரியாணா அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த விசாரணையின்போது பஞ்சாப் மாநில விவசாயிகள் சிலரது கருத்துகளைக் கேட்டறிந்த என்ஜிடி, பயிர் கழிவுகளை மாற்று முறையில் கையாளுவது தொடர்பாக அந்த மாநில அரசுக்கு பதிலளிக்கக் கூறியது. அத்துடன், பஞ்சாபில் பயிர் கழிவுகளை பயன்படுத்த வாய்ப்புள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இதர தொழிற்சாலைகள் குறித்த பட்டியலை அளிக்குமாறு கேட்டது.
மேலும், தேசிய நிலக்கரி மின் உற்பத்தி நிறுவனமானது பொதுப் பொறுப்பின் அடிப்படையில் ஏன் பயிர் கழிவுகளை விவசாயிகளிடம் இருந்து பெறக் கூடாது என்றும் என்ஜிடி கேள்வி எழுப்பியது. இதுதவிர, பயிர் கழிவுகளை மண்ணில் புதைப்பதன் காரணமாக மண்ணுக்கு ஏதேனும் பலன் கிடைக்குமா என்பது தொடர்பாக பஞ்சாப், ஹரியாணா அரசுகள் பதிலளிக்கக் கூறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com