விதிமுறைகளை மீறியதாக தனியார் பள்ளிகளின் 250 பேருந்துகள் பிடிபட்டன

விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 250 பேருந்துகளை தில்லி அரசின் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்

விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 250 பேருந்துகளை தில்லி அரசின் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிடித்தனர். அதில், சர்ச்சையில் சிக்கியுள்ள ரயான் பள்ளியின் 10 பேருந்துகளும் அடங்கும்.
குருகிராமில் உள்ள சர்வதேச பள்ளியான ரயானில் 2-ம் வகுப்பு மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பள்ளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தில்லி பள்ளிகளில் கட்டாயம் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை தில்லி அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், தில்லி போக்குவரத்துக் கழகத்தின் பல்வேறு பரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், தனியார் பள்ளி பேருந்துகளை சோதனை செய்தனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையின்போது, விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் 250 பேருந்துகள் பிடிபட்டன என்றும் அதில் 10 பேருந்துகள் ரயான் பள்ளி பேருந்துகளும் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ரயான் பள்ளி நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
பிடிபட்ட பேருந்துகளின் ஓட்டுநர்கள் பொது சேவை வாகனங்களை இயக்குபவர்கள் என்ற அடையாள அட்டை வைத்திருக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தால் போடப்பட்ட விதிமுறைகளை பேருந்து ஓட்டுநர்களின் உதவியாளர்கள் பின்பற்றப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்த தில்லி அரசு அதிகாரிகள், இனி வரும் காலங்களில் இதுபோன்ற பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
பேருந்து ஓட்டுநர் குறைந்தது 10-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நெறிமுறைகளை வகுத்துள்ளது.
தில்லியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல தினந்தோறும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள், கார்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றன என்று தில்லி அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிப் பேருந்துகளைத் தவிர மாணவர்களை ஏற்றிச் செல்லும் கார்கள், வேன்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு விதிமுறைகளை மீறியதாக கடந்த ஜூலை மாதம் வரை 900 வேன்கள் பிடிபட்டுள்ளன. சுமார் 2000 வேன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com