"ஆர்டிஐ-யில் இருந்து சிபிஐ அமைப்புக்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை'

ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவலை வெளியிடாமல் இருப்பதற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்

ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவலை வெளியிடாமல் இருப்பதற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) இருந்து சிபிஐ அமைப்புக்கு முழு விதிவிலக்கு அளிக்கப்படவில்லை என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 24ஆவது பிரிவில், புலனாய்வுத் துறை, ரா உளவு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில், சிபிஐ அமைப்பும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்த 24ஆவது பிரிவில் மேற்கண்ட அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்கானது, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவரம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவலை அளிப்பதற்கு பொருந்தாது என்று ஆர்டிஐ சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹைதராபாதைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் சி.ஜே. கரிரா, சிபிஐ அமைப்பிடம்,  ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அரசு அலுவலகங்கள் குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார். ஆனால், அந்தத் தகவலைஅளிக்க  சிபிஐ அமைப்பு மறுத்து விட்டது. அப்போது தங்கள் அமைப்பு அதிகாரிகள் யார் மீதாவது ஊழல் குற்றச்சாட்டோ, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டோ இருந்தால், அதுகுறித்த தகவலை மட்டுமே அளிக்க முடியும் என்று சிபிஐ தெரிவித்து விட்டது.
இதுகுறித்து மத்திய தகவல் ஆணையத்திடம்  கரிரா முறையீடு செய்தார். அதை கடந்த 2012-ஆம் ஆண்டில் விசாரித்த மத்திய தகவல் ஆணையத்தின் அப்போதைய தலைமை ஆணையர் சத்யானந்த மிஸ்ரா, கரிகா கேட்கும் தகவலை அளிக்கும்படி சிபிஐ அமைப்புக்கு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ அமைப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீது, தில்லி உயர் நீதிமன்றம் அண்மையில் தனது தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், நீதிபதி விபூ பக்ரு கூறியிருப்பதாவது:
ஒருவர் கேட்கும் தகவலானது, தகவல் அறியும் சட்டத்தின் 8(1) பிரிவின்கீழ் வந்தால் மட்டுமே, ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை அளிக்க முடியாது என்று மறுக்க முடியும். அவ்வாறு தகவல் அளிக்க மறுப்பதற்கு, 10 அடிப்படைக் காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முதல் பிரிவில் இருந்து 24(1) ஆவது பிரிவு வரையிலும் மேலோட்டமாக படித்து பார்த்தாலே, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவலை வெளியிடுவதற்கு, இந்த சட்டவரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். அண்மையில் புலனாய்வுத் துறை தொடர்பான வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு, இந்த வழக்குக்கும் பொருந்தும்.
அந்த சட்டபிரிவில் அளிக்கப்பட்டிருக்கும் விதிவிலக்கானது, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவலை வெளியிடுவதற்கு பொருந்தாது. அதேநேரத்தில், புலனாய்வு அமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் குறித்த தகவலை வெளியிடுவதற்கும், அவற்றின் அதிகாரிகள் குறித்த தகவலை வெளியிடுவதற்கும் அந்த விதிவிலக்கு பொருந்தும் என்று நீதிபதி தெரிவித்தார்.
தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கரிரா கருத்து கூறுகையில், தனக்குத் தேவையான தகவலை கோரி மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com