தில்லியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் 77.8 மி.மீ. மழை!

தலைநகர் தில்லியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெள்ளிக்கிழமை 77.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

தலைநகர் தில்லியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெள்ளிக்கிழமை 77.8 மி.மீ. மழை பெய்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதி, இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளி காற்று சுழற்சி காரணமாக உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேச பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதன் தாக்கம் தலைநகர் தில்லியிலும் வியாழக்கிழமை எதிரொலித்து. வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய லேசான மழை சனிக்கிழமை மாலை வரையிலும் தொடர்ந்தது. தில்லியில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 77.8 மி.மீ. மழை பெய்துள்ளதாக சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் பதிவாகியுள்ளது. இதுபோன்று கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி ஒரே நாளில் 93.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் மட்டும் 332 மி.மீ. மழை பதிவானது.
கடந்த 10 ஆண்டுகளில் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மிக குறைந்த அளவாக 21.8 மி.மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால் தலைநகர் தில்லி வானிலையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெருமளவு வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. தில்லியில் சனிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 8 டிகிரி குறைந்து 26.2 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. காற்றில் ஈரப்பதம் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 98 சதவீதமாக இருந்தது.
வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. தெற்கு தில்லி, லூட்யான்ஸ் பகுதி, மத்திய தில்லி ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் அதிகளவில் தேங்கியது. மேலும், தெரு விளக்குகளும் சரிவர எரியவில்லை. சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். தில்லியில் அக்ஷர்தாம் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காணமுடிந்தது.
தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் உள்ள நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகிய பகுதிகளிலும் வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களிலும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தில்லியில் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வும் மையம் கணித்துள்ளது. அன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதைத் தொடர்ந்து செவ்வாய் முதல் வியாழன் வரை வானம் தெளிவாகக் காணப்படும். இந்த நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சிஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com