குறைகேட்பு அதிகாரி நியமன விவகாரம்: யுஜிசி,  தில்லி பல்கலை. பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் குறைகேட்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற

மாணவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் குறைகேட்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் முடிவை செயல்படுத்தாமல் இருப்பதால் நீதிமன்ற அவதிமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கலான மனு மீது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தில்லி பல்கலைக்கழகம் ஆகியவை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி பல்கலைக்கழகம் உள்பட அனைத்துப் பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்களின் குறைகளை விசாரிப்பதற்காக குறைகேட்பு அதிகாரி நியமிக்க வேண்டும் என்று யுஜிசி விதி கூறுகிறது. 
ஆனால், இந்த விதிகளை தில்லி பல்கலைக்கழகம் உள்பட எந்தப் பல்கலைக்கழகமும் பின்பற்றுவதில்லை என்று முன்னாள் சட்ட மாணவர் ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களின் குறைகளைக் கேட்டுத் தீர்ப்பதற்காக நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும். யுஜிசி விதிகளின்படி ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒரு குறை கேட்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். 
அதேபோன்று கல்லூரிகளில் குறைதீர்ப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை நான்கு மாதங்களில் மேற்கொள்ள வேண்டும்.
குறைகேட்பு அதிகாரி பகுதி நேர அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும். அவர் இப்பதவியில் மூன்று ஆண்டுகள் அல்லது 70 வயது அடையும் வரை இருக்கலாம். யுஜிசி குறைதீர்ப்பு ஒழுங்குமுறைகள் 2012 சரத்துகளின்படி குறைகேட்பு அதிகாரியை நியமிக்க தில்லி பல்கலைக்கழகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தது.
இந்நிலையில், யுஜிசி, தில்லி பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
வழக்குரைஞர் பிரஜேஷ் சிங் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், "பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் குறைகேட்பு அதிகாரி, குறைதீர்ப்பு குழுக்கள் (ஜிஆர்சி)அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அந்த உத்தரவு வேண்டுமென்றே செயல்படுத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. மேலும், குறைகேட்பு அதிகாரி இல்லாமல் தில்லி பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட குறைதீர்வு குழு ஒரு செயல்படாத அமைப்பாகவே உள்ளது. இதனால், நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் வகையில் யுஜிசியும், தில்லி பல்கலைக்கழகமும் செயல்பட்டு வருகின்றன. 
குறைதீர்ப்பு ஒழுங்குமுறைகள் செயல்படாததன் காரணமாக, பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது நியாயமான பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் வி.காமேஸ்வர் ராவ், இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி, தில்லி பல்கலைக்கழகம் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com