தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆம் ஆத்மி அரசு: 3 ஆண்டு கையேட்டை வெளியிட்டு காங்கிரஸ் விமர்சனம்

தில்லியில் ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் நிறைவுற்றும், தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

தில்லியில் ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் நிறைவுற்றும், தேர்தல் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து தில்லி பிரதேச காங்கிரஸ் அலுலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் 3 ஆண்டுகால ஆட்சி குறித்த கையேட்டை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. 
இதை கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ, தில்லி முன்னாள் அமைச்சர்கள் கிரண் வாலியா, ஹாரூண் யூசுஃப், முன்னாள் மக்களவை உறுப்பினர் மகாபல் மிஸ்ரா ஆகியோர் வெளியிட்டனர். 
இதைத் தொடர்ந்து அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
ஆம் ஆத்மி கட்சி எளியோரின் கட்சியாக இருந்து, தற்போது வலியோரின் கட்சியாக மாறியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கையேட்டில், 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளும், 3 ஆண்டு கால ஆம் ஆத்மி ஆட்சியில் செய்யப்பட்டுள்ள பணிகளும் ஒப்பிடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சியில் வளர்ச்சி எவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதையும், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் கையேட்டில் விளக்கியுள்ளோம். 
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஜனலோக்பால் மசோதா உண்மையில் ஜோக்பால் மசோதாவாகும். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெற இயலாமல் ஆம் ஆத்மி அரசு உள்ளது. கல்வித் துறையில் சாதனை எனத் தெரிவிக்கப்பட்டாலும், அரசுப் பள்ளிகளில் 98 ஆயிரம் மாணவர்கள் வெளியேறியுள்ளனர். 
கடந்த ஓராண்டில் மட்டும் 9,149 பேர் சுவாசம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 111 டிஸ்பென்ஸரிகள் மூடப்பட்டுள்ளன. மோசமான சேவை காரணமாக ஏராளமான பயணிகளை தில்லி போக்குவரத்துக் நிறுவனம் இழந்துள்ளது. 1,722 டிடிசி பேருந்துகள் இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தில்லி மெட்ரோ ரயில் கட்டணம் 2 முறை உயர்த்தப்பட்டது மட்டுமல்லாமல், மெட்ரோ திட்டப் பணிகளும் தாமதமடைந்துள்ளன. 2 லட்சம் பேருக்கு ஓய்வூதியத் தொகை கிடைக்கவில்லை. குடிநீர் கட்டணம், கழிவுநீரை அகற்றுவதற்கான கட்டணம் ஆகியவை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏராளமான திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்றார் அஜய் மாக்கன்.


3 ஆண்டுகளில் ...
*  111 டிஸ்பென்ஸரிகள் மூடல்.
*  1,722 டிடிசி பேருந்துகள் இயங்காத சூழல்.
*  டிடிசி பயணிகள் குறைவு.
*  ஓராண்டில் 98 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் வெளியேற்றம். 
*  ஓராண்டில் 9,149 பேர் சுவாச நோய்களால் பாதிப்பு. 
*  கடந்த 2 ஆண்டுகளில் 2 முறை மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு.
*  2 லட்சம் பேருக்கு ஓய்வூதியத் தொகை கிடைக்கவில்லை. குடிநீர், கழிவுநீர் கட்டணம் 3 மடங்கு உயர்வு.


விளம்பர அரசு - ஷீலா தீட்சித்
ஆம் ஆத்மி கட்சியின் மூன்றாண்டு அரசு என்பது வெறும் விளம்பர அரசாகவே உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு எவ்வித வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக அவர்கள் நிறைய பேசி வருகிறார்கள். ஆனால் செயல்களில் ஒன்றும் காணவில்லை. 
இதற்கு மேல் நான் ஏதும் கூறவிரும்பவில்லை ஏனென்றால் மக்களே அதை கண்டு வருகின்றனர். வளர்ச்சிப் பணிகளை செய்துவிட்டதாக ஊடகங்களில் விளம்பரங்களை அளித்து, தில்லி அரசு விளம்பர அரசாகவே செயல்பட்டு வருகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com