முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் தீவிர தூய்மைப் பணி: டிஎம்ஆர்சி தகவல்

தில்லியின் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அனைத்து மெட்ரோ ரயில்களிலும் தூய்மையின் தரத்தை மேம்படுத்தவும், பயணிகள்

தில்லியின் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அனைத்து மெட்ரோ ரயில்களிலும் தூய்மையின் தரத்தை மேம்படுத்தவும், பயணிகள் மகிழ்ச்சியான பயண அனுபவத்தைப் பெறவும் சில தினங்களாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎம்ஆர்சி உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: தில்லி மெட்ரோ ரயில் ஒருங்கிணைப்பில் உள்ள ஷாதரா, வெல்கம், கஷ்மீரி கேட், புது தில்லி, நொய்டா சிட்டி சென்டர், கரோல் பாக், ஆனந்த் விஹார், லக்ஷ்மி நகர், கோவிந்தபுரி, பதர்பூர் போன்ற பல்வேறு ரயில் நிலையங்களில் தூய்மைப் பணியை கூடுதலாக மேற்கொள்வதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இவர்கள், ரயில் நிலைய வளாகத்தில் உடனுக்குடன் தூய்மையைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ரயில் நிலையத்தின் உள்பகுதி போன்று வெளிப்பகுதியிலும் தூய்மையைப் பேணுவதற்கான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு அளிக்க உதவும் நடவடிக்கையாக இது அமையும். 
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தை கடைப்பிடிக்கும் வகையில் ரயில் நிலையத்தின் வெளிப் பகுதியிலும் கூடுதலாக தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும், ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்லும் பயணிகளுக்கும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும். 
இதேபோல, தில்ஷாத் கார்டன், பீதம்புரா, எய்ம்ஸ், ஹோஸ்காஸ், மாளவியா நகர், கரோல் பாக், உத்தம் நகர் கிழக்கு, லட்சுமி நகர், ஜிடிபி நகர், ஆனந்த் விஹார் போன்ற முக்கியமான ரயில் நிலையங்களின் வெளியேறும் பகுதியிலும், நுழைவு வாயில் பகுதிகளிலும் அங்கீகாரமற்ற நபர்கள் பாதையை ஆக்கிரமிப்பதையும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதையும் தடுக்கும் வகையில் கூடுதல் பாதுகாவலர்கள் கண்காணிப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இப்பணியின்போது உள்ளூர் குடிமைப் பணி மற்றும் காவல் துறையினரின் ஒத்துழைப்பு பெறப்படுகிறது. அதேபோன்று, பயணிகள் சேவையின் போது ரயில் பார்ப்பதற்கு தூய்மையாக இருப்பதற்காக ஒவ்வொரு தடவை சேவைக்குப் பிறகு முனைய ரயில் நிலையங்களில் ரயிலை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக பயிற்சி பெற்ற வளாகப் பராமரிப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com