வாழத் தகுதியற்ற நகரம் தில்லி: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் குற்றச்சாட்டு

நாட்டின் தலைநகரான தில்லி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக கிட்டத்தட்ட மாறிவிட்டது என்று மத்திய நகர்ப்புற விவகாரம்

நாட்டின் தலைநகரான தில்லி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக கிட்டத்தட்ட மாறிவிட்டது என்று மத்திய நகர்ப்புற விவகாரம், வீட்டுவசதித் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி சாடினார். இதன் மூலம் அவர் தில்லி அரசை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹர்தீப் சிங் புரி வியாழக்கிழமை பங்கேற்றுப் பேசியதாவது:
தில்லியில் 7,000 அரசு பேருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இந்த குறைபாட்டுக்கு குற்ற அலட்சியமே காரணம்.
இதனால் தில்லி மக்கள் கார்களை அதிகமாக வாங்குகிறார்கள். இதனால் ஏற்படும் வாகன நெரிசலுக்கு தில்லிவாசிகளை குற்றம்சாட்ட முடியாது. இதற்கு பொதுப் போக்குவரத்து வசதி சரிவர இல்லாததே காரணம். இதனால் தில்லி கிட்டத்தட்ட மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிட்டது.
உலகிலேயே 4-வது பெரிய மெட்ரோ ரயில் வழித்தடமாக தில்லி மெட்ரோ திகழ்கிறது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக தில்லி மெட்ரோவின் 4-வது விரிவாக்கத் திட்டம் நிலுவையில் உள்ளது. 
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்ஆர்டிஎஸ் காரிடர் திட்டமும் நிலுவையில் உள்ளது. ஆகையால், அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து தில்லியை வாழ தகுதியான நகரமாக மாற்ற உடனடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
சீலிங் பிரச்னைக்கான தீர்வு தயார்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "தில்லி சீலிங் பிரச்னைக்கான தீர்வுக்காண நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்னைக்கான தீர்வு தயாராகும் நிலையில் உள்ளது என்று உறுதி அளிக்கிறேன். 
உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது, மத்திய நகர்ப்புற விவகாரம், வீட்டு வசதித் துறை அமைச்சக அதிகாரிகளும், தில்லி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகளும் உரிய பதில் மனுக்களை தாக்கல் செய்வார்கள். 
இதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவரும் பொறுமையுடன் அமைதிகாக்க வேண்டும் என்றார்.
தில்லி சீலிங் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தில்லி மாஸ்டர் பிளான் 2021-இல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வரைவு திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 800 ஆலோசனைகள் வரப்பெற்றுள்ளன. அதைத்தவிர மக்களிடம் நேரடி கருத்துக் கேட்பும் நடைபெற்றுள்ளது. 
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் திருத்தத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, டிடிஏ விரைவில் தாக்கல் செய்ய  உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com