ஜெயினுக்கு நெருக்கடி அளித்தது யார்? ஆம் ஆத்மி கேள்வி

தில்லி அரசின் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தனது வாக்குமூலத்தை மாற்றிப்

தில்லி அரசின் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தனது வாக்குமூலத்தை மாற்றிப் பேசுவதற்கு முதல்வரின் உதவியாளரான வி.கே. ஜெயினுக்கு நெருக்கடி அளித்தது யார்? என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. 
இது குறித்து கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லி அமைச்சர் இம்ரான் ஹுசைன், தில்லி டயலாக் கமிஷன் துணைத் தலைவர் ஆஷிஷ் கேதன் ஆகியோர் தாக்கப்பட்டது தொடர்பாக ஆதாரங்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தில்லி பாஜகவின் ஏஜெண்டை போல துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருகிறார். 
முதல்வர் கேஜரிவால் வீட்டில் திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கூட்டத்தில் முதல்வரின் உதவியாளர் வி.கே. ஜெயினும் இருந்துள்ளார். தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக வி.கே. ஜெயின் முதலில் அளித்த வாக்குமூலத்தில், "சம்பவத்தின்போது தான் கழிவறையில் இருந்ததாகவும், அறையில் நடந்தது குறித்து தனக்குத் தெரியாது' எனவும் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது வி.கே. ஜெயின் வேறு விதமாகக் கூறியுள்ளார். தான் கழிவறையிலிருந்து கூட்ட அறைக்குத் திரும்பிய போது தலைமைச் செயலாளர் அவரது மூக்குக் கண்ணாடியை கீழே தேடிக் கொண்டிருந்ததைக் கண்டதாகவும், இதனால், தாக்குதல் நடைபெற்றதற்கு வாய்ப்பு இருப்பதாக வி.கே. ஜெயின் தெரிவித்துள்ளார் என காவல் துறை தற்போது கூறியுள்ளது. 
அப்படியானால், யாருடைய நெருக்கடியால் தனது வாக்குமூலத்தை வி.கே. ஜெயின் மாற்றிக் கொண்டார்? 
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க வி.கே. ஜெயினை காவல்துறையினர் வியாழக்கிழமை மாலை அழைத்துச் சென்றனர். கூட்டம் நடைபெற்ற அறையில், தான் இருந்தவரை எவ்வித தாக்குதலும் நடைபெறவில்லை என முன்பு உறுதியுடன் தெரிவித்த அவர், தற்போது மாற்றிப் பேசுவதன் மர்மம் என்ன? என்றனர்.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் விமர்சனம் குறித்து தில்லி காவல் துறையின் செய்தித் தொடர்பாளரும், காவல் துறை சிறப்பு ஆணையருமான தீபேந்திர பதக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விதிகளின் படியே வி.கே. ஜெயினின் வாக்குமூலம் காவல் துறையினரால் முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com