நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாள்கள் அதிகரிக்கப்பட வேண்டும்: பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் செயல்படும் நாள்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் செயல்படும் நாள்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
"நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அதையொட்டி எழுந்துள்ள சவால்கள்' என்ற தலைப்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றுப் பேசியதாவது:
நாடாளுமன்ற இரு அவைகளிலும் 37 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். மேலும், குடியரசுத் தலைவராக 5 ஆண்டுகள் எனக்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் நமது நாடாளுமன்ற நடைமுறைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து பேச விரும்புகிறேன்.
கடந்த காலங்களை ஒப்பிடுகையில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவைகளின் கூட்டத் தொடர் நாள்கள் சுருங்கி வருகின்றன. கடந்த 1950-களில் மக்களவை அமர்வுகள் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 127 நாள்கள் நடைபெற்றன. மாநிலங்களவை அமர்வுகள் சராசரியாக 93 நாள்கள் நடைபெற்றன.
தற்போது இரு அவைகளிலும் அமர்வுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 75 நாள்களாக குறைந்துவிட்டது. அதிலும், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சுமத்தி எழுப்பும் பிரச்னைகளால் நேரம் வீணடிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாள்கள் அதிகரிக்கப்படும்போது, அரசின் செலவினத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்க முடியும்.
இதேபோல், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது, ஜனநாயகத்தை காப்பதற்கான வழிமுறை அல்ல என்பதை உறுப்பினர்கள் உணர வேண்டும். நாடாளுமன்ற கேள்வி நேரத்தை, ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்பி, பதில் பெறுவதற்கு பயன்படுத்த வேண்டும். மாறாக கோஷங்களை எழுப்பி வீணடிக்கக் கூடாது. எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவது, அரசுக்கு எவ்வித பாதகத்தையும் ஏற்படுத்தாது. மாறாக அரசுக்கு சாதகமாகவே அமையும்.
மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டாலும், அதுபோன்று தேர்தலை நடத்துவது சிரமமான விஷயமே என்றார் பிரணாப் முகர்ஜி.
கருத்தரங்கில் பங்கேற்ற ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா பேசுகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் உள்கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும். அதில், குற்றப் பின்னணி உடையவர்களைப் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com