மக்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்! ஆம் ஆத்மி அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சச்சரவுகளை ஒதுக்கிவிட்டு தலைநகர் வளர்ச்சியிலும், மக்கள்

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சச்சரவுகளை ஒதுக்கிவிட்டு தலைநகர் வளர்ச்சியிலும், மக்கள் நலனிலும் தில்லி அரசும், அதன் அதிகாரிகளும் அக்கறை செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தில்லி முன்னாள் அமைச்சர் அர்விந்தர் சிங் லவ்வி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தலைநகர் தில்லியில் ஊழல் இல்லாத அரசை அளிப்போம் என தெரிவித்த ஆம் ஆத்மி ஆட்சியில் முதல்வர் முன்னிலையில் தலைமைச் செயலாளர்  தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தில்லிவாசிகளுக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கூட்டத்தில் பொது விநியோகத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஆம் ஆத்மி விளக்கம் அளித்து வருகிறது. ஆனால், துறையின் அமைச்சரோ, செயலாளரோ கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து முறையான விளக்கம் இல்லை. முதல்வரின் இல்லம் அதிகாரிகளின் அரணாக இருக்க வேண்டும். ஆனால், சதியின் இல்லமாக மாறிவிட்டது. 
 துறைகளின் தலைவராகத்தான் தலைமைச் செயலாளர் இருக்க முடியுமே தவிர, ஒவ்வொரு துறையிலும் நடைபெறும் பணிகள் தொடர்பாக அவர் அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கூட அரசு மேற்கொண்ட முடிவுகளுடன், அதிகாரிகள் முரண்பட்டுள்ளனர். இருப்பினும், முரண்பாடுகளை புறந்தள்ளிவிட்டு திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்திக் காட்டியுள்ளது. 
எந்தவொரு மாநில அரசுக்கும் மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை சமர்பிக்க வேண்டியதிருப்பதால் பிப்ரவரி மாதம் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. ஆனால், தில்லியில் இதுவரை நிதிநிலை அறிக்கை தொடர்பாக எந்தவொரு ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவில்லை. தில்லி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக காலாண்டுக்கு ஒருமுறை ஆய்வுக்குள்படுத்தப்படும் என துணை முதல்வரும், நிதித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
ஆனால், தில்லி அரசின் திட்டமிடல் துறை இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி எந்தவொரு ஆய்வும் நடைபெறவில்லை. பொதுப் பணித்துறையால் அடித்தட்டு மக்களுக்கும், தொழில் துறை, மீன்வளத் துறை ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து சுகாதாரத் துறையில் 66 சதவீதம், கல்வித் துறையில் 41 சதவீதம், சமூக நலத்துறையில் 89 சதவீதம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. துறை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியில் உணவு வழங்கல் துறை 18.87 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. இதுபோல கடந்த நிதியாண்டில் ரூ. 4 ஆயிரம் கோடியும், நடப்பு நிதியாண்டில் ரூ. 6 ஆயிரம் கோடியும் செலவிடப்படாமல் உள்ளன என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com