மாநகராட்சி பள்ளிகளை தில்லி அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்: ஆசிரியர்கள் ஊதிய நிலுவை வழக்கில் உயர் நீதிமன்றம் யோசனை

கிழக்கு, வடக்கு தில்லி மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இரண்டு மாத ஊதிய நிலுவையை வழங்காத மாநகராட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்த

கிழக்கு, வடக்கு தில்லி மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இரண்டு மாத ஊதிய நிலுவையை வழங்காத மாநகராட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்த தில்லி உயர் நீதிமன்றம், முடியாவிட்டால் தில்லி அரசிடம் பள்ளிகளை ஒப்படைக்கவும் யோசனை தெரிவித்தது.
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களின் நிலுவை ஊதியத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று கடந்த ஜனவரி 5-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத தில்லி மாநகராட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனத்தின் சார்பில் வழக்குரைஞர் அசோக் அகர்வால் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனு தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கிழக்கு தில்லி மாநகராட்சியின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "4-வது தில்லி நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை தில்லி அரசு அமல்படுத்தாத காரணத்தால் மாநகராட்சிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரைதான் ஆசிரியர்களுக்கு மாநகராட்சிகள் ஊதியம் வழங்கி உள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆசிரியர்களிடம் இப்படியா நடந்து கொள்வது? அவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்றால் எப்படி அவர்களால் சேவை செய்ய முடியும்? மாநகராட்சிகளால் ஆசியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என்றால், பள்ளிகளை தில்லி அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
கடந்த 2011-ஆம் ஆண்டு தில்லி மாநகராட்சிகள் மூன்றாக பிரிக்கப்பட்ட பிறகு, ஆசியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஊதியம் வழங்க கிழக்கு, வடக்கு தில்லி மாநகராட்சிகள்  பிச்சை எடுக்கும் நிலையே தொடர்கிறது.
 4-வது தில்லி நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பது குறித்தும் தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கு அளிக்க வேண்டிய நிதி யாரிடம் உள்ளது என்பது குறித்தும்  தில்லி அரசும், மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 8-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com