தில்லி பாஜகவில் பூர்வாஞ்சல் ஆதிக்கம் அதிகரிப்பு!

தில்லி பாஜகவில் பூர்வாஞ்சல் பகுதியினரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தில்லி பாஜகவில் பூர்வாஞ்சல் பகுதியினரின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட ஏனைய பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், பூர்வாஞ்சல் எனப்படும் கிழக்கு உத்தர பிரதேசம், பிகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பூர்வாஞ்சல் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட சுமார் 50 லட்சம் பேர் தில்லியில் வசித்து வருகின்றனர். தில்லியில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 40 சதவீதம் பேர் பூர்வாஞ்சல் பிரிவினர். தில்லியின் ராஜேந்தர் நகர், விகாஷ்புரி, துவாரகா, உத்தம் நகர், பதப்பூர், பட்பர்கஞ்ச் ஆகிய பகுதிகளில் இவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பூர்வாஞ்சல் மக்களை கவரும் வகையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் பேசும் "போஜ்புரி' மொழியின் பிரபல சினிமா நடிகரான மனோஜ் திவாரி, தில்லி பாஜகவின் தலைவராக 2016, நவம்பரில் நியமிக்கப்பட்டார். தலைமைப் பொறுப்பேற்றதில் இருந்து பூர்வாஞ்சல் பகுதி மக்களை இலக்கு வைத்து அவர் இயங்கி வருவதாகக் பேசப்பட்டு வந்தது. மேலும், பிகாரில் பிரபல நடிகராக இருப்பதால் அவர் செல்லும் இடங்களில் பூர்வாஞ்சல் மக்கள் கூட்டம் அலைமோதின. இதனால், மனோஜ் திவாரியை தில்லித் தலைவராக நியமித்ததுக்கு உடனடிப் பலன் கிடைத்தது. 2017, ஏப்ரலில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல்களில் தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் 67 எம்.எல்.ஏ.களை வென்ற ஆம் ஆத்மியால், மாநகராட்சித் தேர்தல்களில் 67 கவுன்சிலர்களைக் கூட ஜெயிக்க வைக்க முடியவில்லை. இத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பூர்வாஞ்சலைப் பூர்வீகமாகக் கொண்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்று கவுன்சிலர்களாகினர்.
இந்நிலையில், தில்லி பாஜகவில் அதிகரித்து வரும் பூர்வாஞ்சல் பகுதியினரின் ஆதிக்கத்தால் பிற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தில்லி பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:
மனோஜ் திவாரி தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து தில்லி பாஜகவில் பூர்வாஞ்சல் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மாநகராட்சித் தேர்தலில் அவர் அதிகளவு பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர்களேயே வேட்பாளர்களாக நிறுத்தினார்.
மேலும், பூர்வாஞ்சல் பகுதி மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார். பூர்வாஞ்சல் பகுதி மக்களின் செல்வாக்கை மட்டும் வைத்து வெற்றிபெற்று விடலாம் என நினைக்கிறார். இதனால், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களை பூர்வீகமாகக் கொண்ட பாஜக தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இவர்கள் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து மனோஜ் திவாரியை தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுள்ளனர் என்றனர்.
இந்நிலையில், இக்குற்றச்சாட்டை மனோஜ் திவாரி தரப்பினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "தில்லி பாஜகவில் எந்தவித பிளவும் இல்லை.
மனோஜ் திவாரி தில்லி மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். தில்லி பாஜகவில் பிரதேச வாரியாகப் பிளவிருப்பதாக எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com