வடகிழக்கு மாநிலங்களில் கால்பதிக்க ஆம் ஆத்மி திட்டம்!

பஞ்சாப், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டதைத்தொடர்ந்து, வடகிழக்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.

பஞ்சாப், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டதைத்தொடர்ந்து, வடகிழக்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வடகிழக்கு மாநிலங்களில் கால்பதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திட்டமிட்டுள்ளார். இதற்காக அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று, மக்களிடம் ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ள செல்வாக்கு குறித்து ஆய்வு நடத்தியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தொடங்கி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், தில்லியைத் தவிர கோவா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அக்கட்சி போட்டியிட்டுள்ளது.
இதில், பஞ்சாபில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. வேறு மாநிலங்களில் அக்கட்சியால் கால்பதிக்க முடியவில்லை. எனினும், விரைவில் அறிவிக்கப்படவுள்ள மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக, அடிதட்டு திட்டங்களை வகுக்க அக்கட்சியின் வடகிழக்கு மாநில விவகாரங்களைக் கவனித்து வரும் ஹபுங் பயாங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஹபுங் பயாங் கூறுகையில், "நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், திரிபுராவில் உள்ள சில தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, மிசோராமில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார். இதன் மூலம் அந்த மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு வரும் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இதேபோல், இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து, ஊழலுக்கு எதிராக போராடி பிரபலமான அரவிந்த் கேஜரிவால், 2012-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி அடுத்த ஆண்டே தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றி பெற்றார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையற்ற ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக தில்லியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. பின்னர் ஜன லோக்பால் சட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்கவில்லை என்று கூறி ஆட்சி பொறுப்புக்கு வந்த 49 நாள்களில் அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தார். இதையடுத்து 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவைத் படுதோல்வி அடையச் செய்து 67 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது.
இதையடுத்து, தேசிய அளவில் தடம்பதிக்க ஆம் ஆத்மி கட்சி சந்தித்த சில மாநில தேர்தல்கள் அக்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
எனினும், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, அதற்கு முன்பு வரும் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு நாடு முழுவதும் கட்சியைப் பலப்படுத்தவே ஆம் ஆத்மி கட்சி இதுபோன்ற திட்டங்களை வகுத்து வருவதாகவும், அதற்கான முன்னோட்டம்தான் இந்த வடகிழக்கு மாநில பேரவைத் தேர்தல்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com