தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடும் அமளி: நான்கு முறை அடுத்தடுத்து அவை ஒத்திவைப்பு

தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரண்டு மணி நேரத்தில் அவை நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்த்து கோஷமிட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தில்லி சட்டப்பேரவையின் மூன்று நாள் குளிர்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெறும் என்று சட்டப் பேரவை செயலகம் அறிவித்திருந்தது. வடக்கு தில்லியின் சில பகுதிகளிலும், சத்தர்பூர், ஹோஸ்காஸ், டிஃபன்ஸ் காலனி, வசந்த் குஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களால் ஆக்கமிரப்பு செய்யப்பட்ட பகுதிகள், சட்டவிரோத கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு எதிரான மாநகராட்சியின் "சீல்' வைப்பு நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சார்பில் பேரவை கூட்டத் தொடரில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
இந்நிலையில், திங்கள்கிழமை கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வு தொடங்கியது. சட்டப்பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் தலைமையில் அவை கூடியதும், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர், பாஜக ஆளும் தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு அவையின் மைப்பகுதிக்கு வந்தனர். பின்னர் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் நகர்ப் பகுதியில் கடந்த 2007-ஆம்ஆண்டில் இருந்து நிலுவையில் இருந்து வரும் 351 சாலைகளை கலப்பு நிலப் பயன்பாட்டுக்கான அறிவிக்கை வெளியிடும் விவகாரத்தை எழுப்பி தில்லி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து ஏற்பட்ட அமளியின் காரணமாக அவையை 15 நிமிடங்களுக்கு பேரவைத் தலைவர் கோயல் ஒத்திவைத்தார். 
பின்னர் மீண்டும் அவை கூடியதும், பேரவையின் 70 உறுப்பினர்களில் பெரும்பான்மை எண்ணிக்கையைக் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் இதே விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவர்களை இருக்கையில் சென்று அமருமாறு பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை மீண்டும் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதையடுத்து, மீண்டும் அமளி தொடர்ந்ததால் மூன்றாவது முறையாக 15 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அவை கூடியபோதும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்அமளியில் ஈடுபட்டதால் மாலை 3.45 மணிக்கு நான்காவது முறையாக அரை மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. 
பின்னர் 4.15 மணிக்கு மீண்டும் அவை கூடியது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசுவதற்கு முயற்பட்டார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தாவும், பாஜக எம்எல்ஏ மன்ஜிந்தர் சிங் சிர்சாவும் சாலைகள் தொடர்பான விவகாரத்தை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இருவரையும் அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டார். இதன்படி இருவரும் அவையில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டனர். 
இது தொடர்பாக துணை முதல்வர் சிசோடியா பேசுகையில், "டிசம்பர் 22-ஆம் தேதி டோனி டிஃபன்ஸ் காலனி மார்க்கெட்டில் மாநகராட்சி சீல் வைப்பு நடவடிக்கையைத் தொடங்கியதற்கு "மிரட்டிப் பணம் பறிக்க வேண்டும்' என்ற பாஜகவின் உள்நோக்கம்தான் காரணமாகும். மேலும், 351 சாலைகளை கலப்பு நிலப் பயன்பாட்டுக்கான சாலைகளாக அறிவிக்கை செய்யும் விவகாரத்தில் ஏற்படும் தாமதத்திற்கும் பாஜகதான் காரணம். சீல் வைப்புநடவடிக்கையின் போது அக்கட்சியினர் வர்த்தகர்களை மிரட்டிப் பணம் பறிக்கின்றனர்' என்றார். அமளியின்போது அவையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லை. 
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் தொழிற்சங்கத்தினர் மத்திய தில்லி, ஐடிஓ அருகே உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரௌஸ் அவென்யு பகுதியில் ஒன்று கூடினர். மாநகராட்சியின் சீலிடும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com