காற்று மாசு:பொதுப் பணித் துறைக்கு மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உத்தரவு

தில்லியில் பொதுப் பணித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் மற்றும் அவ்விடங்களில் உருவாகும் இடிபாடு

தில்லியில் பொதுப் பணித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள் மற்றும் அவ்விடங்களில் உருவாகும் இடிபாடு கழிவுகள் குறித்த தகவல் தொகுப்பை தயாரித்து, அவற்றின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அத்துறைக்கு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிசிசி) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் பொதுப் பணித் துறைக்கு டிபிசிசி அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
பொதுப் பணித் துறையின் அனைத்து கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும் இடங்கள், அந்த இடங்களில் இருந்து உருவாகும் இடிபாடு கழிவுகள் ஆகியவை நகரில் காற்று மாசுவை ஏற்படுத்தாமல் இருப்பதை பொதுப் பணித்துறை உறுதி செய்ய வேண்டும். 
தில்லி பகுதி காற்றில் பிஎம் 10,  பிஎம் 2.5 மாசு நுண் துகள்கள் ஏற்படுவதற்கு  கட்டுமானங்கள்,  இடிபாடு கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவது முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதனால், பொதுப் பணித் துறை தனது கட்டுமானம், இடிபாடு கழிவுகளை சேகரித்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். பொதுப் பணித்துறை தனது இடங்களில் உருவாகும் கட்டுமானங்கள்,  இடிபாடுகள் கழிவுகள் குறித்து கண்காணித்து, உரிய தகவல் தொகுப்பை உருவாக்க வேண்டும்.  மேலும், ஆண்டுக்கு ஒருமுறை அது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில், 2016-ஆம் ஆண்டைய கட்டுமானம், இடிபாடு கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-ஐ பின்பற்ற வேண்டும் என்று அந்த உத்தரவில்  டிபிசிசி அறிவுறுத்தியுள்ளது.
நகரில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுப் பொருள்கள் கொட்டப்படும் இடங்களில் இருந்து காற்று மாசு ஏற்படுவதாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, இந்த நடவடிக்கையை மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மேற்கொண்டுள்ளது.
தேசியத் தலைநகரில் தூசி மாசுவைத் தடுக்கும் வகையில் 500 கிலோ மீட்டர் தூர சாலையில் இயற்கைக் காட்சி சூழலை உருவாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தில்லி அரசின் மூன்றாவது ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
மேலும்,  நகரில் மாசு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்ந்தறியும் வகையில் ஆண்டு முழுவதும் காற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
தில்லியில் காற்று மாசு பல பகுதிகளில் பல நேரங்களில் பல்வேறு சூழல்கள் காரணமாக ஏற்படுவதாக தில்லி அரசு கூறி வருகிறது.  இதனால், காற்று மாசு ஏற்படும் தருணத்தில் அவற்றுக்கான காரணங்களைக் கண்டறியும் வகையில் இயந்திரங்களைத் தருவிக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com