தலைமைச் செயலர் தாக்கப்பட்ட விவகாரம்: கேஜரிவாலின் முன்னாள் ஆலோசகரிடம் மீண்டும் விசாரணை?

தில்லி தலைமைச் செயலர் அன்ஷு  பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில்,  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் முன்னாள்

தில்லி தலைமைச் செயலர் அன்ஷு  பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில்,  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் முன்னாள் ஆலோசகர் வி.கே.ஜெயினிடம் மீண்டும் விசாரணை நடத்த தில்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
தில்லியில் பிப்ரவரி 19-ஆம் தேதி இரவு முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அப்போது,  முதல்வர் முன்னிலையில் தில்லி அரசின் தலைமைச் செயலர் அன்ஷு  பிரகாஷை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் தாக்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக  அன்ஷு  பிரகாஷ் போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து, பிப்ரவரி 23-ஆம் தேதி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வர் இல்லத்தில் போலீஸார் விசாரணை நடத்தி,  அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிவிடி கேமராக்களை ஆய்வு செய்தனர்.  அப்போது,  கேமராவின் ஹார்டு டிஸ்கை மீட்டு,  தடய அறிவியல் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அந்தப் பரிசோதனையின் அறிக்கைக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஆலோசகராக இருந்த வி.கே. ஜெயின் அறிக்கை வெளியிட்டார்.  பின்னர், தனது சொந்த காரணங்களுக்காக முதல்வரின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.
தலைமைச் செயலர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக  ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானத்துல்லா கான்,  பிரகாஷ் ஜர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.  பின்னர்,  இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 
இதனிடையே,  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் ஆலோசகராக இருந்த வி.கே. ஜெயினிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியபோது,  ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பிரகாஷ் ஜர்வால், அமானதுல்லா கான் ஆகிய இருவரும் தலைமைச் செயலர் அன்ஷு  பிரகாஷை சூழ்ந்து கொண்டு தாக்கியதாக அவர் கூறியதாக நீதிமன்ற விசாரணையின்போது போலீஸார் தெரிவித்திருந்திருந்தனர். 
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய சில விஷயங்கள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக வி.கே. ஜெயினிடம் மீண்டும் விசாரிக்கப்படலாம் தில்லி காவல்  துறை உயர்  அதிகாரி தெரிவித்தார். 
தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் கேஜரிவால், ஜெயின்,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தவிர,  அக்கூட்டத்தில் பங்கேற்ற 11 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே போலீஸார் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com