கோச்சடையான் திரைப்படம் கடன் விவகாரம்: தனியார் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு

கோச்சடையான் திரைப்படக் கடன் விவகாரத்தில் "மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் கோரிக்கையை

கோச்சடையான் திரைப்படக் கடன் விவகாரத்தில் "மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததுடன், இது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யவும் மறுத்துவிட்டது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்புப் பணிக்காக லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள "மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்துக்கு "ஆட்-பீரோ விளம்பர நிறுவனம்' கடன் அளித்திருந்தது. இந்நிலையில், வாங்கிய கடன் தொகையில் ரூ.8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதமுள்ள தொகையைத் தரவில்லை என்றும் ஆட்-பீரோ நிறுவனம் தெரிவித்தது.
 இது தொடர்பாக "ஆட்-பீரோ விளம்பர நிறுவனம்' நிறுவனம் அளித்த புகாரின் பேரில் லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு எதிராக பெங்களூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, இது தொடர்பாக ஆட்- பீரோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, "லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யப்படவில்லை' எனக் கூறி கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஆட்-பீரோ நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்க லதா ரஜினிகாந்துக்கு 2016, ஜூலை 8-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், லதா ரஜினிகாந்த் தலைமையிலான குளோபல் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 12 வாரங்களுக்குள் கடன் நிலுவைத் தொகை ரூ.6. 20 கோடியை ஆட் -பீரோ நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இம்ப்லீடுமன்ட் மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது மீடியா ஒன் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார், "ஆட் - பீரோ நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய ரூ. 10 கோடி நிலுவைத் தொகையில், ரூ. 9.20 கோடி அளிக்கப்பட்டுவிட்டது. மீதம் ரூ. 80 லட்சம் மட்டுமே அளிக்க வேண்டியுள்ளது. மீதமுள்ள நிலுவைத் தொகைக்கும் லதா ரஜினிகாந்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, இந்த வழக்கில் மீடியா ஒன் நிறுவனத்தையும் இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்றார். 
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைத்துக் கொள்ளக் கோரும் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கோரிக்கை தேவையற்றது எனக் கருதுகிறோம். எனவே, மனுவைத் தள்ளுபடி செய்வதுடன் நாங்கள் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம்' எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com