சீலிங் நடவடிக்கையால் தில்லியின் பொருளாதாரத்தில் சரிவு: பிரவீண் கண்டேல்வால்

தில்லியில் சீலிங் நடவடிக்கையால் பொருளாதாரம் சரிந்துள்ளது என்று அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பிரவீண் கண்டேல்வால் தெரிவித்தார்.

தில்லியில் சீலிங் நடவடிக்கையால் பொருளாதாரம் சரிந்துள்ளது என்று அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பிரவீண் கண்டேல்வால் தெரிவித்தார்.
தில்லி சீலிங் நடவடிக்கை தொடர்பாக தினமணிக்கு அவர் அளித்த பேட்டி: 
மத்திய, மாநில அரசுகளும், மாநகராட்சிகளும் தங்கள் மீதுள்ள தவறுகளை மறைப்பதே இந்த சீலிங் நடவடிக்கையாகும். ஒரு கடை சீல் வைக்கப்பட்டால் அக்கடையின் உரிமையாளர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அக்கடையின் ஊழியர்கள், விநியோகஸ்தர்கள் உள்பட சுமார் 50 பேரின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. தில்லியில் இது வரை சுமார் 6,000 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சீலிங் நடவடிக்கையால் தில்லியின் பொருளாதாரம் பெருமளவு சரிந்துள்ளது. சீலிங் நடவடிக்கை தொடர்ந்தால், நாங்கள் தில்லியை விட்டு வெளியேறி அண்டை மாநில நகரங்களான நொய்டா, குருகிராம், ஃபரீதாபாத், சோனிபட் ஆகிய இடங்களுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. 
மாஸ்டர் பிளான் குளறுபடி: மாஸ்டர் பிளான் மூலமே ஒரு நகரம் திட்டமிடப்படுகிறது. ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒரு முரை மாஸ்டர் பிளான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன்டி முதலாவது மாஸ்டர் பிளான் 1960-இல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 1962-இல்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதேபோல, அடுத்தடுத்து அனைத்து மாஸ்டர் பிளான்களும் தாமதமாகவே அறிமுகப்படுத்தப்பட்டன. மாஸ்டர் பிளானை அறிமுகப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டிய மெத்தனத்தால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சீலங் நடவடிக்கையை மாநகராட்சிகள் மேற்கொள்வதால், இதற்கு மாநகராட்சிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல தில்லி அரசு அதிகாரிகளும், மத்திய அரசு அதிகாரிகளும் சீலிங் நடவடிக்கையில் தங்களுக்குள்ள பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது. 
உருமாற்றக் கட்டணமாக கோடிக்கணக்கான ரூபாயை வணிகர்கள் செலுத்தியுள்ளனர். உருமாற்றக் கட்டணம் என்ற பெய ரால் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட உருமாற்றக் கட்டணம் தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். சீலிங் நடவடிக்கைக்குப் பின்னணியில் உள்நாட்டு சில்லறை வணிகத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் சர்வதேச பெரு நிறுவனங்களின் சதி இருப்பதாக வணிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
சீலிங் நடவடிக்கைக்கு வணிகர்கள்தான் காரணம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும். அரசு நிலங்களை வணிகர்கள் ஆக்கிரமித்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இந்தியாவில் தீவிரவாதிகளுக்குக் கூட தங்கள் தரப்பு நியாயங்களைக் கூற நீதித் துறையால் சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் வணிகர்களுக்கு தங்களது தரப்பு நியாயங்களைச் சொல்ல சந்தர்ப்பம் வழங்கப்படாமல், வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படுகின்றன.
சீலிங் நடவடிக்கைக்கு எதிராக சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் கோரியுள்ளோம். உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளோம் என்றார் பிரவீண் கண்டேல்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com