பில் தொகையில் தள்ளுபடி கேட்டு உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: 4 பேருக்கு வலைவீச்சு

"பில்' தொகையில் தள்ளுபடி தருமாறு கேட்டு உணவக உரிமையாளர், ஊழியர்களைத் தாக்கியதாக நான்கு பேரை தில்லி போலீஸார் தேடி வருகின்றனர்.

"பில்' தொகையில் தள்ளுபடி தருமாறு கேட்டு உணவக உரிமையாளர், ஊழியர்களைத் தாக்கியதாக நான்கு பேரை தில்லி போலீஸார் தேடி வருகின்றனர்.
கிழக்கு தில்லி மண்டாவளி, பாண்டவ நகரில் உணவகம் நடத்தி வருவபர் விஜய் குப்தா. இவரது கடைக்கு சம்பவத்தன்று சிலர் உணவு வாங்கிச் செல்ல வந்தனர். அதற்கான பில் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்குமாறு கேட்டனர். இதற்கு கடை உரிமையாளர் விஜய் குப்தா மறுத்தார். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்ப வந்து விஜய் குப்தா மற்றும் கடை ஊழியர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய் குப்தா உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து விஜய் குப்தாவின் மகன் அமித் குப்தா கூறுகையில், "சம்பவத்தன்று எங்கள் கடைக்கு சிலர் உணவு வாங்கிச் செல்ல வந்தனர். உணவைப் பெற்ற பிறகு அதற்கான தொகையை தருமாறு எனது தந்தை விஜய் குப்தா கேட்டார். அந்தத் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி தர வற்புறுத்தினர். இதற்கு மறுப்புத் தெரிவித்த எனது தந்தையிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொன்று விடுவதாகவும் மிரட்டினர். இதையடுத்து, எனது தந்தை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். எனினும், போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, மோட்டார்சைக்கிளில் வந்த நான்கு பேரும் எங்கள் கடையை அடித்து நொறுக்கி எனது தந்தை, ஊழியர்களைக் கடுமையாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில், காயமடைந்த எனது தந்தை உள்ளிட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என்றார்.
இதுகுறித்து கிழக்கு தில்லி காவல் துணை ஆணையர் பங்கஜ் சிங் கூறுகையில், "உணவக உரிமையாளர், ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் முழுவதும் விடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com