பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக இல்லை: பாஜக

தில்லி சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக அமையவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா


தில்லி சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக அமையவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: வெள்ளிக்கிழமை நிறைவடைந்த தில்லி சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடர், கடந்த மூன்றரை ஆண்டுகளிலேயே பயனற்ற கூட்டத் தொடராக அமைந்தது. ஆக்கப்பூர்மாக அமையவில்லை. முக்கிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. ஒரு மசோதாவைக் கூட சட்டமாக்க முனைப்புக் காட்டப்படவில்லை.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மத்திய அரசு, பாஜக, அரசு அதிகாரிகள் ஆகியவற்றுக்கு எதிராக பொருத்தமில்லாத கருத்துகளை ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தெரிவித்தனர். 5 நாள்கள் நடைபெற்ற கூட்டத் தொடரில் வெறும் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே முதல்வர் அவையில் இருந்தார். இதிலிருந்து கூட்டத் தொடர் குறித்து அரசுக்கு உள்ள அக்கறையை அறிந்து கொள்ள முடியும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் தடுக்க மொத்த சக்தியையும் ஆம் ஆத்மி அரசு பயன்படுத்தியது. வங்கதேசத்தவர்களின் ஊடுருவல், பெண் அதிகாரியை அவமானப்படுத்தியது உள்ளிட்ட விவகாரங்களை பாஜக உறுப்பினர்கள் எழுப்ப முயன்ற போதெல்லாம் அதற்கு அனுமதி வழங்காமல் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டது. மூன்று முறை அவைக் காவலர்களைக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவரை வெளியேற்றினார்கள். இதுபோன்ற ஆக்கப்பூர்வமற்ற சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு மக்கள் வரிப் பணத்தை செலவிட்டதற்கு தில்லி அரசு மன்னிப்புக் கோர வேண்டும் என்றார் விஜேந்தர் குப்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com