அசம்பாவித சம்பவங்கள்: பள்ளி முதல்வர்களுக்கு தில்லி அரசு உத்தரவு

பள்ளிகளில் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், தீ விபத்து, போராட்டம் போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அதுதொடர்பாக

பள்ளிகளில் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், தீ விபத்து, போராட்டம் போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால், அதுதொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தில்லியின் கோல்மார்க்கெட் பகுதியிலுள்ள என்டிஎம்சி பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் ஊழியர் பாலியல் துன்புறுத்தல் அளித்த சம்பவம் சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த நிலையில், இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் முதல்வர்களுக்கும் தில்லி கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிகளில் வன்முறை, தீ விபத்து, போராட்டம், மோதல், திருட்டு, பாலியல் துன்புறுத்தல், தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால், அதுதொடர்பான தகவல் ஊடகங்களுக்கு செல்லும் முன் அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 
இதில் எந்த தாமதத்துக்கும் இடமளிக்கக் கூடாது. அப்போதுதான், உரிய காலகட்டத்துக்குள் அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.
அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழ்ந்துவிட்டால், சம்பந்தபட்ட பள்ளியின் முதல்வர் உடனடியாக கல்வித் துறை உயரதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர், விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும். 
இந்த உத்தரவை பின்பற்றாத பள்ளி முதல்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com