அதிக வாடகை கேட்டதால் பிரச்னை:  வீட்டு உரிமையாளர்கள்-மாணவர்கள் மோதல்: கல்வீச்சில் 3 பேர் காயம்

வடக்கு தில்லியின் நேரு விஹார் பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் இடைத் தரகர்களுக்கும், அப்பகுதியில் தங்கியிருந்து போட்டித்

வடக்கு தில்லியின் நேரு விஹார் பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் இடைத் தரகர்களுக்கும், அப்பகுதியில் தங்கியிருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
மாணவர்களிடம் கூடுதல் வாடகை கேட்டதால், இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருதரப்பும் கல்வீசி தாக்கிக் கொண்டதில், 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு: பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், தில்லியின் நேரு விஹார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ஐஏஎஸ் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த மாணவர்களிடம், அதிக அளவில் வாடகை வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், வீட்டு வாடகையை தன்னிச்சையாக உயர்த்தியது தொடர்பாக சில மாணவர்களுக்கும் இடைத்தரகர் ஒருவருக்கும் வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இடைத்தரகரும் அவரது உதவியாளர்களும் சேர்ந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், சுமார் 150 முதல் 200 மாணவர்கள் அப்பகுதியில் திரண்டனர். இடைத்தரகருக்கு ஆதரவாக வீட்டு உரிமையாளர்கள் பலர் திரண்டனர். இருதரப்பும் ஒருவர் மீது மற்றொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். சில கார்களும் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக ஆனந்த் மிஸ்ரா என்ற மாணவர்கள் கூறுகையில், "நேரு விஹார் பகுதியில் தங்கியிருந்து, போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். வசதி குறைவான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எங்களிடம் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை வாடகை வசூலிக்கின்றனர். மேலும் கூடுதல் தொகை கேட்டால் நாங்கள் எப்படி கொடுக்க முடியும்' என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com