தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் நிகழும்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் நிகழும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார். 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் நிகழும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார். 
 இது தொடர்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: காவிரியில் கூடுதலாக நீர் வந்த பின்னரும், கால்வாய்கள் தூர்வாரப்படாததால், தமிழகத்தில் காவிரி கடைமடைப் பகுதிகளுக்கு நீர் கிடைக்கவில்லை. தமிழகத்தில் காவிரி கடைமடைப் பகுதிகளான அறந்தாங்கி, நாகுடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இன்னும் காவிரி நீர் கிடைக்காமல் மக்கள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களைத் திரட்டி அந்தந்தப் பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தவுள்ளோம். 
கேரள வெள்ளத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது 1 மாத ஊதியத்தை வழங்கவுள்ளனர். காங்கிரஸ் கட்சியினரால் வரும் 22-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்கள் சேமிக்கப்பட்டு கேரளத்துக்கு அனுப்பப்படவுள்ளன. ரஃபேல் போர் விமான ஊழலில் வரலாறு காணாத அளவில் ரூ. 1.70 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதில், பிரதமர் மோடி நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளார். இந்த ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதன் நிறைவாக சென்னையில் மாபெரும் பேரணி நடத்தவுள்ளோம்.
18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் விவகாரத்தில் தீர்ப்பு வரும் போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் நிகழும். அந்தத் தீர்ப்புடன் தமிழக அரசு கவிழும். நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எங்களது கூட்டணிக்கு மேலும் கட்சிகளை இணைக்க முயற்சிக்கிறோம். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் எங்களது கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்றார் திருநாவுக்கரசர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com