மனைவி, இரு குழந்தைகளை தன்னுடன் திரும்புவதற்கு உத்தரவிடக் கோரிய ஆப்கானியரின் மனு நிராகரிப்பு

இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தை பெற்றுள்ள தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை ஆப்கானிஸ்தானுக்கு தன்னுடன் திரும்புவதற்கு

இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தை பெற்றுள்ள தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை ஆப்கானிஸ்தானுக்கு தன்னுடன் திரும்புவதற்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்தவரின் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட மனைவியும், இரு குழந்தைகளும் மனுதாரருடன் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவிக்காததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கன் நாட்டை எனக்கு காபூலில் ஒரு பெண்ணுடன் 2008-திருமணம் நடைபெற்றது. 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் இரு குழந்தைகள் பிறந்தன. நாங்கள் அனைவரும் 2017, பிப்ரவரி 18-ம் தேதி இந்தியாவுக்கு சுற்றுலா நுழைவு இசைவில் வந்தோம். 
தெற்கு தில்லி, கால்காஜியில் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். இந்நிலையில், 2017, மார்ச் 8-ஆம் தேதி பூங்காவுக்கு சென்றிருந்த எனது மனைவி, இரு குழந்தைகளும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, கால்காஜி காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தேன். ஆனால், கடந்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதிதான் எனது மனு வழக்காக பதிவு செய்யப்பட்டது. 
இதையடுத்து, போலீஸார் எனது மனைவியைக் கண்டுபிடித்தனர். எங்கள் இருவரையும் கால்காஜி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி அழைத்தனர். அப்போது, என்னுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று மனைவி தெரிவித்தார். மேலும், எனது மனைவியும் இரு குழந்தைகளும் தற்காலிக அகதிகள் அந்தஸ்தை பெற்றிருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது. எனவே, என்னுடன் ஆப்கானுக்கு திரும்பி வர மனைவிக்கும், இரு குழந்தைகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட இரு குழந்தைகளையும், தந்தையையும் நீதிமன்றத்திற்கு வரவழைத்து சமரச முயற்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மனைவி, இரு குழந்தைகள் தந்தையுடன் வாழ விருப்பமில்லை எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: 
மனுதாரரின் மனைவி தனக்கும் தனது இரு குழந்தைகளுக்கும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஹை கமிஷனர் விதிகளின் கீழ் அகதிகளுக்கான அந்தஸ்தை பெற்றுள்ளார். மேலும், அவர்கள் வைத்துள்ள அகதிகள் அடையாள அட்டை அடுத்தாண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி வரை செல்லுபடியாகும். மேலும், குழந்தைகளின் உயிர் மற்றும் உடமைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்படவில்லை. மனுதாரரின் மனைவியும், இரு குழந்தைகளும் மனுதாரருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால், இந்த மனு நிராகரிக்கப் படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக, மனு மீதான விசாரணையின் போது, "மனுதாரர் இந்தியா வரும் போது தனது குழந்தைகளை தந்தை என்ற முறையில் பார்ப்பதற்கான உரிமையை அளிக்க வேண்டும்' என்று வாதிடிப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "குழந்தைகள் அவரைப் பார்க்க மறுப்பதால் இது சம்பந்தமான எந்த உத்தரவையும் அவசர கதியில் பிறப்பிக்க விரும்பவில்லை' என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com